செய்திகள் :

பிரபல பாதிரியாரின் தம்பி; புத்தகக்கடை நடத்திய எளிய மனிதர் மிஷாவ்- ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை-2

post image
நாத்திகர். இஸ்லாத்தை பின்பற்றும் கறுப்பினத் தலைவர் மால்கம் X-ன் நண்பர்.

‘கறுப்பர்களின் மெக்கா’ என்றழைக்கப்படும் ஹார்லெம் நகரில் புத்தகக் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரி. இதுதான் லூயிஸ் மிஷாவ்வின் அடையாளம். இப்படிப்பட்டவரின் உடன்பிறந்த சகோதரர் அமெரிக்கா முழுவதும் அறியப்பட்ட பிரபல கிறிஸ்தவ மதபோதகர். அவருடன் சேர்ந்து இறைப்பணி செய்யாமல், இப்படி புத்தகக் கடை நடத்தி எளிமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். உடனே கேட்கத் தோன்றிய கேள்வி, இவருடைய சகோதரர் பாதிரியார் சாலமன் லைட்ஃபுட் மிஷாவ் பற்றித்தான். அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

லூயிஸ் மிஷாவ்

“நீங்க இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படுவேன் இவா மேடம். எல்லாருக்கும் இருக்கும் சந்தேகம்தான் இது. அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் அவர்களே தொலைக்காட்சியில் அண்ணன் சாலமனின் போதனைகளை செவிமடுக்கிறார் எனும் போது, இந்தக் கேள்வி எழுவது இயல்புதானே…”

என்னுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல சொன்னதால், நான் கண்களைச் சிமிட்டினேன். வானொலியில் தேவ செய்தியை வழங்கி வந்த போதகர் (Evangelist) சாலமன் லைட்ஃபுட் மிஷாவ், தொலைக்காட்சியின் வருகைக்குப் பின், அந்தத் தொழில்நுட்பம் வாயிலாகவும் தேவனின் மகிமையை மக்களிடம் கொண்டு சென்றார். தொலைக்காட்சியில் முதன் முறையாக கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்தவர் (Televangelist) என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், அதிபர் ஹாரி ட்ரூமனின் தனிப்பட்ட ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அதனால், இந்தக் கேள்வியை முன் வைத்தேன். “கறுப்பர்களுக்கான போராட்டக் களத்தில், கல்விப் புலத்தில், எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் நீங்கள் பிரபலமாக அறியப்பட்டிருந்தாலும், உங்களுடைய சகோதரர் ஒரு மதப் பிரசாரகர் என்ற வகையில் அமெரிக்கா முழுவதும் பிரபலம். உங்கள் இருவரின் பால்யகாலம் குறித்துச் சொல்லுங்களேன்…”

“எல்லா அமெரிக்கக் குடும்பங்களையும் போலத்தான் எங்கள் குடும்பமும். கிறிஸ்தவ மத நம்பிக்கையில் ஊறிய குடும்பம். அம்மா வீட்டு வேலைகளின் போது, எப்போதும் ஏதாவது தேவ பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். தேவாலயத்திற்கு செல்வதோடு, நியயமாக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு இயேசுவின் அன்பில் அடைக்கலம் தேட சிறுவயதிலேயே எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

“ஒரு சம்பவம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது… அந்தச் சம்பவத்துக்குப் பின்னாடிதான் நான் இப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக மாறிப் போனேனோ… தெரியவில்லை. பத்துப் பதினோறு வயசிருக்கும் அப்போ எனக்கு.

“அப்பாவிடம் சைக்கிள் கேட்டிருந்தேன். என்னோட வயச ஒத்த பசங்களெல்லாம் அப்போது சைக்கிள் ஓட்டிக்கிட்டு திரிஞ்சதால நானும் வாங்கிக் கேட்டேன். அதுக்கு, ‘இயேசுவிடம் பிரார்த்தனை செய். கடவுள் உனக்கு சைக்கிள் தருவார்’ என அப்பா பதிலளித்தார். அந்த வருஷம் கிறிஸ்துமசும் முடிஞ்சிருச்சு. சாண்டா கிளாஸ்கூட வந்தாரு, ஆனா சாண்டா கிளாஸ் எனக்கு சைக்கிள் தரல. நான் ஏமாற்றமடைந்தேன். அப்பாவிடம் இது தொடர்பாக மீண்டும் முறையிட்ட போது, ‘கடவுளை அவசரப்படுத்தாதே, அவர் உனக்குத் தர வேண்டிய நேரத்துல தருவார்’ அப்டின்னு பதில் சொன்னாரு.

“அம்மாவிடம் போய் முறையிட்டேன். ‘உன்னுடைய பிரார்த்தனை நிறைவேற, அதாவது உனக்கு கடவுள் எதையும் தர வேண்டுமென்றால், அதுக்கு நீ முயற்சி செய்யணும், முதல் அடியை நீதான் எடுத்து வைக்கணும்…’ அம்மா இப்படி பதில் சொன்னார்.

“அம்மா என்ன சொல்ல வர்றாங்க? எனக்கு அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை. அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே தெருவுக்கு வந்து அப்படியே சாலையில் நடந்தேன். தூரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவன், சைக்கிளை ஒரு மரத்தடியில் நிறுத்தி விட்டு, தோட்டத்திற்குள் சென்று பழங்கள் பறித்துக் கொண்டிருந்தான்.

“அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது: ‘நீதான் முதல் அடியை எடுத்து வைக்கணும்…’

“அந்த சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு கிளம்பினேன். திரும்பிப் பார்த்தேன். யாரும் என்னைத் துரத்தவில்லை. பிரார்த்தனை நிறைவேற அம்மா சொல்லிக் கொடுத்த உத்தி வேலை செய்தது. ஓர் இறைவழிபாட்டை உளமாற செய்ததோடு, அதற்கு உடனே பலன் கிடைத்த மகிழ்ச்சியில் ‘இயேசுவுக்கு நன்றி…’ என உற்சாகத்தோடு கடவுளைப் புகழ்ந்து துதிக் கொண்டே வந்தேன்.”

குறுக்கிட்ட நான், “ஓஹோ… இதுதான் நீங்க நாத்திகராக மாறிய தருணமா? அதெல்லாம் ஓகே… உங்க அண்ணன் எப்படி பக்திமானாக மாறினார்?”

நாத்திகரானது இப்படித்தானா என நான் சொன்னதும், “அப்படியும் சொல்லலாம்…” என்று சிரித்தவர், “வர்ஜீனியா மாகாணம், நியூபோர்ட் நியூஸ் பகுதில, ஜெஃபர்ஸன் அவென்யூல எங்க குடும்பம் இருந்திச்சு. எங்க அப்பா ஜான் ஹென்றி மிஷாவ் மீன் வியாபாரம் செய்தார். அம்மா பிளாஞ்ச், குடும்பத் தலைவி. பெரிய குடும்பம், அண்ணன் தம்பி தங்கைன்னு நாங்க ஒன்பது பேர். இதுல மூத்தவர் பிறக்கும் போதே, முகத்துல தழும்பு இருந்ததால, அவர் சிறப்பான குழந்தை என்றும், தெய்வ சித்தத்தை நிறைவேற்ற இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மண்ணில் தோன்றியவர் என்றும் அம்மா ஆழமாக நம்பினார்.

“வெறுமனே நம்பிக்கையோடு நிறுத்தல. அவரை தெய்வப் பணிக்காக அர்ப்பணிக்கனும்ணு எங்க அம்மா பிரயாசைப்பட்டார். அதை நோக்கியே அவரை வளர்த்து எடுத்தாரு. ஆனா, ஒரு குடும்பத் தலைவரா, எங்க அப்பாவுக்கு என்ன சிந்தனை இருந்திருக்கும்னு சொல்லுங்க பார்க்கலாம்…?

“அவரோட காலத்துக்குப் பின்னாடி, மீன் கடை பிசினஸை அண்ணன் லைட்ஃபுட்தான் கவனிச்சுக்கனும்ணு அப்பா விரும்பினாரு. ஆனா, அம்மாவுக்கு அது பிடிக்கல. கடைசில, அம்மா ஆசைப்பட்டது மாதிரியே அண்ணன் சாலமன் லைட்ஃபுட் மிஷாவ், பாதிரியார் ஆயிட்டாரு…”

அவர் சொல்லச் சொல்ல என்னுடைய சிந்தனை வேறு பக்கம் சென்றது. அமெரிக்க அதிபரே ஆலோசனைக் கேட்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த நபராக வலம் வந்த பிரபல பாதிரியாரின் தம்பி என்ற போதிலும், அந்தப் புகழ் வெளிச்சத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தங்களுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடிமை நுகத்தடியிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான திறவுகோலை கறுப்பர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு நபரிடம்தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

லூயிஸ் மிஷாவ்

“அவர் இறை நம்பிக்கையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நான் அதுக்கு நேரெதிரான சாத்தானின் பாதையை தேர்ந்தெடுத்தேன்…”

சொல்லி விட்டு, சிரித்தார் லூயிஸ் மிஷாவ். சிரிக்க சிரிக்க இருமல் வந்து அவஸ்தைப் படவும், அதைப் பொருட்படுத்தாமல் அடுத்த கேள்வி என்ன என்பது போல என்னைப் பார்த்தார்.

- பக்கங்கள் திறக்கும்

மனித புத்தகம்; அறிவகம்; பேராசிரியர்... - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை -1

தி புரஃபசர் “என்னுடைய பெயர் இவா. சுருக்கமாக இவானிட்டி மிஷேல்.”கட்டிலில் அமர்ந்திருந்த லூயிஸ் மிஷாவ்விடம் (Lewis Michaux) முக மலர்ச்சியோடு கைகுலுக்கினேன். வழக்கத்துக்கு மாறான என்னுடைய அறிமுகத்தால் புரு... மேலும் பார்க்க

`இவர் திகிலைக் கிளப்பும் ஓவியங்களை வரைய என்ன காரணம்?’ - Edvard Munch-ன் அலறல் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

எழுத்தாளர் நரனின் 'வேட்டை நாய்கள்' - பதைபதைக்கும் கதை இனி ஆடியோ புக் வடிவில்! | Vikatan Play

எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல். தூத்துக்குடிப் பின்னணியில் விரிகிறது கதை. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து சகோதரர்களிடையே ஹார்பரில் யார் கோலோச்சுவது என்பதில் பல ஆண்டு... மேலும் பார்க்க

நீரதிகாரம் நாவல் இப்போது Audio வடிவில் | Vikatan Play | Neerathikaaram

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத... மேலும் பார்க்க

`கொலை நகரமான டீ எஸ்டேட்’ : எரியும் பனிக்காடு புத்தக பின்னணி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க