கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!
`பேச மறுத்தார்… போலீஸில் புகார் செய்வதாக மிரட்டினார்; கத்தியால் குத்தினேன்!' - இளைஞர் `பகீர்!'
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.
ரமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரமா உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் ரமாவை கொலைசெய்தது அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், “ரமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர், மனைவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து ரமா, லிங்கராஜிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ரமாவைக் கொலைசெய்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த லிங்கராஜை போலீஸார் கைதுசெய்தனர்.
விசாரணையில், “ரமா 2 ஆண்டுகளாக என்னிடம் நன்றாக சிரித்துப் பேசி வந்தார். நாளடைவில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக என்னிடம் பேசுவதை நிறுத்தினார். கடந்த 24-ம் தேதி ரமா அகரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது என்னிடம் பேசுவதை ஏன் நிறுத்தினாய்? எனக் கேட்டேன். `இனிமேல் என்னிடம் பேச வேண்டாம்' எனக் கூறினார்.
மறுநாள் பலமுறை போன் செய்தும் போனை தொடர்ந்து கட் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த அவரிடம் தொடர்ந்து பேசு. உன்னுடனான பழக்கத்தை நிறுத்த முடியாது என்றேன். `தொடர்ந்து டார்ச்சர் செய்தால் போலீஸில் புகார் அளிப்பேன்' எனச் சொல்லி வீட்டின் கதவை அடைக்க முயன்றார். அது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினேன். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால் பைக்கை போட்டுவிட்டு ஓடிவிட்டேன்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.