அதானியைப் பாதுகாக்கிறதா மத்தியஅரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!
Champions Trophy : இரண்டு நாளில் முக்கிய மீட்டிங்; சாம்பியன்ஸ் டிராபியை நடத்துமா பாகிஸ்தான்?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என பிசிசிஐ உறுதியாக கூறியிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் முற்றி வரும் அரசியல் நெருக்கடியால் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்குமா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும்பட்சத்தில் இந்திய அணி கட்டாயமாக பாகிஸ்தானுக்கு பயணிக்காது என்பதுதான் பிசிசிஐ யின் நிலைப்பாடு. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தினாலும் இந்திய அணியின் ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் வைத்து நடத்த வேண்டும் என்பதுதான் பிசிசிஐயின் விருப்பம். கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பைத் தொடரும் இப்படித்தான் நடந்திருந்தது. இந்தியாவின் ஆட்டங்களெல்லாம் இலங்கையில் மட்டுமே நடக்க, மற்ற அணிகளெல்லாம் பாகிஸ்தானிலும் போட்டிகளில் ஆடின. அப்படி ஒரு ஹைப்ரிட் முறைப்படியே தொடரை நடத்த வேண்டும் என பிசிசிஐ கோருகிறது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு பிசிசிஐ முன் வைக்கும் ஹைப்ரிட் முறையில் தொடரை நடத்த விருப்பமில்லை. முழுத் தொடரையும் பாகிஸ்தானிலேயே நடத்த வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். பல அணிகளும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக வந்து ஆடி செல்கின்றனர். நாங்களும் கடந்த ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பையில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு சென்று வந்தோம். அப்படியிருக்க இந்திய அணிக்கு மட்டும் பாகிஸ்தானுக்கு வந்து ஆடுவதில் என்ன சங்கடம்? என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
இரண்டு நாடுகளுக்கிடையே இருக்கும் முரண்களினால்தான் ஐ.சி.சி இன்னமும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டி அட்டவணையை வெளியிடாமல் வைத்திருக்கிறது.
இந்நிலையில்தான் பாகிஸ்தானிஸ் சாம்பியன்ஸ் டிராபி நடப்பதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது. பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சில வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்த போது வேறு சில வழக்குகளைக் காரணம் காட்டி அவரை இன்னும் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. அவரை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர். இதில் வன்முறை வெடிக்கவே பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் விளைவாக பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட்டின் A அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில போட்டிகளில் ஆட திட்டமிட்டிருந்தது. அந்தத் தொடரின் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இலங்கை அணி மற்ற போட்டிகளை ஒத்திவைத்துவிட்டு பாகிஸ்தானிலிருந்து உடனடியாக கிளம்பியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என இந்தியா உறுதியாக இருக்கும் நிலையில் இப்படியொரு சம்பவம் பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவைக் கொடுத்திருக்கிறது.
இப்படியொரு சூழலில்தான் நவம்பர் 29 ஆம் தேதி ஐ.சி.சியின் நிர்வாகக்குழு கூடி சாம்பியன்ஸ் டிராபி சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்குமா? அப்படி நடந்தால் இந்தியாவுக்காக பிரத்யேகமாக என்ன ஏற்பாடுகளை செய்வார்கள்? என்பதையெல்லாம் அந்த கூட்டத்தில்தான் முடிவு செய்யவிருக்கிறார்கள்.
ஆக, நவம்பர் 29 ஆம் தேதி ஐ.சி.சி நடத்தப்போகும் கூட்டத்தை கிரிக்கெட் உலகம் உன்னிப்பாக கவனிக்கவிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாகவும் இந்தக் கூட்டம் அமையலாம்.