தீயினால் காற்று மாசு: ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் பலி!
தீயினால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகுவதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
காட்டுத் தீ, நிலப்பரப்பில் ஏற்படுத்தப்படும் செயற்கை தீ ஆகியவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் உலகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் ஆய்வில் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம், காட்டுத் தீயை அடிக்கடி மற்றும் தீவிரப்படுத்துவதால் வரும் காலங்களில் பாதிப்பு மேலும் உயரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரலாற்றில் நிகழாண்டுதான், மிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்டுத் தீ, செயற்கை தீ (விவசாய நிலங்களை எரிப்பது போன்றவற்றால் ஏற்படும் தீ) ஆகிய காரணங்களால் காற்றின் மாசு அதிகரித்து, உலகெங்கும் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 1.53 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது.
தீயினால் காற்று மாசு அதிகரித்து, 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4.5 லட்சம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்; மேலும், சுவாச நோயால் பாதிக்கப்பட்டு சுமார் 2.2 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவை குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நடுத்தர அல்லது வளர்ந்து வரும் நாடுகளில்தான் ஏற்படுகின்றன; சஹாரா-கீழமை ஆப்பிரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பலி எண்ணிக்கை ஏற்படுகிறது.
சீனா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா ஆகியவை அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளாக உள்ளன. இந்த நிலையில், புவி வெப்பமடைதலுக்கு குறைந்த பங்களிப்பு கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் இருப்பதாக ஆய்வில் தெரிகிறது.
இதையும் படிக்க:போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
சமீபத்தில் புதுதில்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டால், பலதரப்பட்ட மக்களுக்கு மூச்சுத்திணறள் உள்ளிட்ட சுவாச நோய்களும் இதய நோய்களும் ஏற்பட்டுள்ளன; வட இந்தியாவில் சட்டவிரோதமாக பண்ணை நிலங்களை எரிப்பதே, தில்லியில் காற்றின் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக கூறப்படும் சில வழிமுறைகளாக மாசு ஏற்பட்ட பகுதியைவிட்டு விலகிச் செல்தல், காற்று சுத்திகரிப்பான்கள், முகமூடிகளைப் பயன்படுத்துதல், வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பது போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இவையாவும் ஏழை நாடுகளில் ஒத்து வராது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.