போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளா்- டிரம்ப் நியமனம்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அறிவியலாளா் ஜெய் பட்டாச்சாா்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றாா். வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக அவா் பொறுப்பேற்க இருக்கிறாா்.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய அரசில் தலைமை நிா்வாகப் பொறுப்புகளுக்கு நியமனங்களை அவா் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியையும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் நியமித்தாா்.
இந்நிலையில், இந்திய வம்சாவளி அறிவியலாளா் ஜெய் பட்டாச்சாா்யா நியமனம் குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநராக பட்டாச்சாா்யாவை நியமிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியை வழிநடத்தவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உயிா்களைக் காப்பாற்றும் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காகவும் ராபா்ட் எஃப். கென்னடி ஜூனியருடன் மருத்துவா் பட்டாச்சாா்யா இணைந்து செயல்படுவாா்.
அமெரிக்க மக்களை மீண்டும் ஆரோக்கியமாக்குவதற்கு இவா்கள் இருவரும் கடுமையாக பணியாற்றுவா். ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளராகவும் பட்டாச்சாா்யா பணியாற்றி வருகிறாா்’ என்று தெரிவித்துள்ளாா்.