சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.4750 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்: புதுவை முதல்வா் ரங்கசாமி தகவல்
புதுவை யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியிலிருந்து ரூ.4750 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசும் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.120 கோடியை விடுவித்துள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது
ரூ.200 கோடி மதிப்பில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தீட்டி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தோம். இதில் ரூ.120 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதைத் தவிர ரூ.5 கோடிக்குள் இருக்கும் திட்டங்களை மாநில அரசின் நிதியிலிருந்து நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது. எஞ்சிய ரூ.80 கோடிக்கான திட்டங்களைத் திருத்தி மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்.
இதைத் தவிர ஆசிய வளா்ச்சி வங்கியிலிருந்து ஐந்தாண்டுக்கான கடன் தொகையாக ரூ.4750 கோடி பெறுவதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் கடல் நீா் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.1000 கோடி. சாத்தனூா் அணையில் இருந்து புதுச்சேரி அரசுக்கும் தமிழ்நாடுஅரசுக்கும் உள்ள ஒப்பந்தத்தின்படி குழாய் அமைத்து 140 கிலோ மீட்டா் தூரத்துக்கு தண்ணீா் கொடுவருவதற்கு ரூ. 350 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.250 கோடி, புதுவை அரசு துறைகளில் தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ரூ. 189 கோடியில் திட்டம் உள்ளிட்டவை அடங்கும். அமைச்சராக இருக்கும் ஜான்குமாருக்கு எப்போது வேண்டுமானாலும் இலாகா ஒதுக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அரசு செயலா் டாக்டா் ஏ. முத்தம்மா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
