உ.பி. மருத்துவமனை தீ விபத்து: குழந்தைகளைப் பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் பிழைத்த குழந்தைகளை அதன் பெற்றோர் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த, பச்சிளம் குழந்தைகள் பிரிவில், 44 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைகளை அதன் பெற்றோர் பார்க்க விடாமல் மருத்துவமனை நிர்வாகம் தடுப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் குழந்தைகளை பெற்றோர் பார்க்க அனுமதிக்க இயலாது. சில குழந்தைகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, தங்களது குழந்தைகளை அடையாளம் காண்பதில் பெற்றோர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படலாம். அது குழந்தைகள் பெற்று வரும் சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமே முக்கியமாகக் கொண்டு மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்கிறார்கள்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் ஒருவர் கூறுகையில், தீ விபத்து நேரிட்டது முதல், என் குழந்தையை நான் பார்க்கவில்லை. ஆனால், இப்போது என் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் என்று கதறி அழுகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.
எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.