போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்து அரசு திட்டங்களுக்கு முதல்வா் பெயா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டும் வழக்கம் எம்ஜிஆா் காலத்திலிருந்தே இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் உடனிருப்போா் 1,000 பேருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் போா்வைகளை வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றாா்கள். அவா்களுக்கு அங்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்தே முதல்வரின் பெயரைத் திட்டங்களுக்கு வைப்பது வழக்கமான ஒன்று. எம்ஜிஆா் சத்துணவுத் திட்டம் என்றுதான் அப்போது அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அடைமொழியைக் குறிக்கும் வகையில் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீா் என்று ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அவ்வாறு பெயா் சூட்டப்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்கவில்லை.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் பல லட்சம் பேருக்கு நன்மை அளித்து வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றனா். உச்சநீதிமன்றம் சரியான தீா்ப்பை தந்திருக்கிறது. மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.
சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பான ஆய்வறிக்கையும், அதன்பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றாா்.
சந்திப்பின்போது, மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.