Inbox 2.0 Eps 11: உங்கள் கோரிக்கை நிறைவேறியது! | Cinema Vikatan
"ஒருவர் டூத் பிரஷ்ஷை விழுங்குவதற்குக் காரணம்..." - மருத்துவர் பாசுமணி சொல்வதென்ன?
தலைமுடியை விழுங்கியவர்களைப்பற்றி கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷை விழுங்கியவர்களைப்பற்றி...? மகாராஷ்டிராவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் பல் துலக்கும்போது எதிர்பாராத விதமாக 20 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷ்ஷை விழுங்கியிருக்கிறார். இதன்பிறகு, அவராகவே அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்று நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்மணியை ஆரம்பத்தில் அவநம்பிக்கையுடன் பார்த்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பிறகு இரைப்பைக் குடலியல் நிபுணர் ஒருவர், அந்தப் பெண்மணி விழுங்கிய டூத் பிரஷ்ஷை வெளியில் எடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.
நல்வாய்ப்பாக, அந்தப் பெண்ணுடைய குடலில் டூத் பிரெஷ்ஷால் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மகாராஷ்டிராவில் டூத் பிரஷ் விழுங்கிய முதல் கேஸ், இந்தப் பெண்மணிதான் என்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன்னாள், டெல்லியைச் சேர்ந்த 36 வயது ஆண் ஒருவர் இதேபோல பல் தேய்க்கையில் டூத் பிரெஷ்ஷை விழுங்கியிருக்கிறார். இந்தப் பெண்மணியாவது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அந்த நபர், மருத்துவமனைக்கும் செல்லாமல், யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
விளைவு, நடுராத்திரியில் வயிற்று வலிதாங்காமல் துடித்தவரை, மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு வலியின் காரணத்தை அறிய ஸ்கேன் செய்ய, இரைப்பையின் மேல் பகுதியில் டூத் பிரஷ் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த வகை கேஸ்கள் உலகம் முழுக்க இதுவரை முப்பதுக்கும் குறைவாகவே பதிவாகியிருக்கிறதாம்.
இப்படியெல்லாம்கூட நிகழுமா, அல்லது தெரிந்தே செய்வார்களா என இரைப்பைக் குடலியல் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.
''இது எதிர்பாராமலும் நடக்கும். சில ஆண்கள், ஏதோ சிந்தனையில் ஷேவிங் க்ரீமை டூத் பிரஷ்ஷில் வைத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்து விடுவார்கள். இதுபோலவே, ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், பாத்ரூமில் லைட் போடாமல் பல் தேய்க்கையில், வேறு எதையோ சிந்தித்தபடி பல் தேய்க்கையில் டூத் பேஸ்ட்டில் வழுக்கியபடி பிரஷ் தொண்டைக்குள்ளே கொஞ்ச தூரம் செல்லலாம்.
எங்கோ ஒருவருக்கு முழுதாகவும் சென்று விடலாம். ஆனால், அது மிக மிக அபூர்வமாக நடப்பது. அதனால்தான், அந்தப் பெண்மணி உடனடியாகத் தானே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
மற்றபடி, டூத் பிரஷ்ஷை முழுதாக விழுங்குவது என்பது, அடுத்தவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவே செய்யப்படுவது. அல்லது அன்றைய தினம் வேலையிலோ, பர்சனல் வாழ்க்கையிலோ அவர்களால் சமாளிக்க முடியாத சவால் ஏதாவது இருந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செய்வார்கள். ஒருவரே பலமுறை டூத் பிரஷ், தலைமுடி, ஆணி போன்றவற்றை விழுங்கினால், அவர்களுக்குக் கடுமையான உளவியல் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.
நான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது, இதுபோன்ற நோயாளிகள் பலரைச் சந்தித்திருக்கிறேன். சிலர் வாரத்துக்கு, மாதத்துக்கு ஒருமுறை எனக் கையில் கிடைத்த எதையாவது விழுங்கிவிட்டு மருத்துவமனைக்கு வருவார்கள். அது மலத்தில் வெளிவருவதற்கு மருந்து தருவோம். சிலமுறை அறுவை சிகிச்சை தேவைப்படாது. சிலமுறை அதுவும் தேவைப்படும். அவர்களுடைய மனநலம் பாதிக்கவிட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். அந்தப் பெண்மணி விஷயத்தில் நடந்தது அபூர்வம். அதுவே தொடர்ந்தால், உளவியல் சிக்கல் என்று அர்த்தம்'' என்கிறார் மருத்துவர் பாசுமணி.