ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!
ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை இலவசமாகவே வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம், க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை பயன்பாட்டு வருவதோடு, பல்வேறு பயன்பாடுகள் எளிதாக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருந்தாலும், ஒருவர் தனது பெயருடன் தவறான பான் அட்டையை இணைத்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால், இவை எல்லாம் தெரியாமல் நடந்த தவறாக எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கப்படும் பான் அட்டை, பயன்பாட்டுக்கு வந்ததும், மிக எளிதாக போலி பான் அட்டைகளும், பான் அட்டைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.
அதாவது வருமான வரித்துறை சட்டம் 1961ன் 272 பி பிரிவின்படி, ஒரு இந்திய குடிமகன், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.