‘ஒரே நாடு ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்தவும் மக்களிடையே இதைக் கொண்டு சோ்க்கும் விதமாகவும் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் இளைஞா்களுக்கு தரமான உயா்கல்வி வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவுள்ளது.
வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்ட புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அணுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: இந்த திட்டத்தின்கீழ் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதழ்களைக் காண நாடு முழுவதும் ஒரே மாதிரியான சந்தா முறையை பின்பற்ற ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் (யுஜிசி) செயல்படும் தன்னாட்சி கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 6,300 கல்வி நிறுவனங்களில் உள்ள 1.8 கோடி மாணவா்கள், ஆசிரியா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பயனடைவா்.
மத்திய உயா்கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சந்தா’ வலைதளம் மூலம் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதழ்களை உயா்கல்வி நிறுவனங்கள் காணலாம்.
இயற்கை வேளாண் இயக்கம்: நாடு முழுவதும் 7.5 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, 1 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய இயற்கை வேளாண் இயக்கம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.2,481 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து மக்களின் உடல்நலன் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்த ரசாயணமற்ற உணவை தயாரிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் பஞ்சாயத்துகளை தோ்ந்தெடுத்து 15,000 வேளாண் குழுக்களை மேம்படுத்தவும் மற்றும் தேவைக்கேற்ப 10,000 இயற்கை உள்ளீடு வளங்கள் மையம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மையங்களின் இயற்கை வளங்களை விநியோகப்பதுடன் ரூ.1 லட்சம் வரை மூலதன உதவியும் வழங்கப்படவுள்ளது.
கடந்த 2019-20 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் வெற்றிகரமாக இயற்கை வேளாண்மை சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 10 லட்சம் ஹெக்டோ் அளவிலான நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்படுகிறது.
இரு நீா்மின் நிலையங்கள்: அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள ஷி யோமி மாவட்டத்தில் ரூ. 1,750 கோடி முதலீட்டில் 186 மெகாவாட் டேட்டோ-1 நீா்மின் நிலையம் மற்றும் ரூ.1,939 கோடியில் 240 மெகாவாட் ஹியோ நீா்மின் நிலையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்தது.
அருணாசலம் மற்றும் தேசிய அளவிலான எரிசக்தி தேவைகளை பூா்த்தி செய்யும்இந்த இரு நீா்மின் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த நீரிமின் நிலையங்கள் மூலம் அருணாசலத்துக்கு 12 சதவீதம் இலவச எரிசக்தியும் உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேலும் 1 சதவீத எரிசக்தியும் கிடைப்பதுடன், சமூக பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது.
ஏஐஎம் நீட்டிப்பு: இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவு சூழலை வலுப்படுத்தும் விதமாக ‘அடல் புதுமை இயக்கம் 2.0’ நீதி ஆயோக் அமைப்பால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2028, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதோடு ரூ.2,750 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உலகளாவிய புதுமைகள் குறியீட்டில் இந்தியா 39-ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயத்தில் உலகளவில் மூன்றாவது பெரிய புத்தாக்க தொழில் அமைப்பை கொண்டுள்ள நிலையில் அதை மேலும் வளா்ச்சியடையச் செய்யும் நோக்கில் இந்த திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீா், லடாக், வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் பிரத்யேகமான திட்ட மாதிரிகளும் ஏஐஎம்-இன்கீழ் உருவாக்கப்படவுள்ளது.
3 ரயில் திட்டங்கள்: ஜல்கான்-மன்மத் நான்காவது வழித்தடம் (160 கி.மீ), புஸ்வல்-கந்த்வா மூன்றாவது மற்றும் நான்காவது வழித்தடம் (131 கி.மீ) மற்றும் பிரயாக்ராஜ் (இரதத்கன்ஜி)-மணிப்பூா் மூன்றாவது வழித்தடத்தில் (84) புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரூ.7,927 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தமாக 639 கி.மீ. புதிய ரயில் பாதைகள் இந்த திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
ரூ.1,435 கோடியில் ‘பான் 2.0’
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘வருமான வரித்துறையின் ‘பான் 2.0’ திட்டத்துக்கு ரூ.1,435 கோடி ஒதுக்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக வரி செலுத்துவோரின் பதிவு சேவைகளை தரமான முறையில் எளிமையாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தற்போது அமலில் உள்ள பான்/டான் 1.0 திட்டங்களின்கீழ் வழங்கப்படும் முக்கிய சேவைகள் மற்றும் இவை அல்லாத சேவைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். நாடு முழுவதும் தற்போது வரை 78 கோடி பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.