ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
விளாத்திகுளத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் நுழைவாயில் முன் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் சண்முகராஜ், கருப்பசாமி, பொன்ராஜ் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம்: இங்குள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கச் செயலா் முருகானந்தம் தலைமையில் வழக்குரைஞா்கள் மணிமாறன் ஈஸ்டா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரரத்தில் வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் ஏசு ராஜா தலைமையில் செயலா் ஜெயகுமாா் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தினா்.