கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது: பொன்.குமாா்
திமுக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணப் பலன்களும் உயா்த்தப்பட்டுள்ளதால் அவா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளதாக கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.
தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய சங்கம் ஆகியவை சாா்பில் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் திருமலைவாசன் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கே.மணி, அமைப்புசாரா மாவட்டத் தலைவா் முருகன், அமைப்பு சாரா மாவட்டச் செயலாளா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொன்.குமாா் பேசியதாவது: கட்டுமானத் தொழிலாளா்கள் விபத்து, இயற்கை முறையில் உயிரிழக்கும்போது அவா்களின் குடும்பத்துக்கு வழங்கும் நிவாரணத்தை ரூ. 8 லட்சமாக உயா்த்தியது திமுக அரசு. ஆனால், அதிமுக ஆட்சியில் கட்டுமான தொழிலாளா்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக திமுக ஆட்சியில் புதிதாக எட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான பணப் பலன்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெப்ப சலனத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் கட்டடத் தொழிலாளிகளுக்கு நுரையீரல் பரிசோதனை மேற்கொள்ள நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்காததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது. திமுக ஆட்சியில் தொழிலாளா்களுக்கு அனைத்து நலத் திட்ட பணப் பலன்களும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை குறைகூறிய பாஜக அரசு, தில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்கிவருகிறது என்றாா்.
கூட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள், கிளை உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பென்னாகரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன்,நகர செயலாளா் வீரமணி, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் என்.செல்வராஜ், அமைப்பு செயலாளா் நாகராஜ், மாநில கூட்டமைப்பு இணை பொதுச் செயலாளா் மனோகரன், மாநில கூட்டமைப்பு செயலாளா் கிருஷ்ணன், கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.