நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Albu...
கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கச் சென்று அப்பாவி மக்கள்தான் பலியாகியிருக்கிறார்கள். நடந்தது விபத்துதான், அதற்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசையும், காவல்துறையையும் விஜய் குறை கூறுவது அபத்தமானது.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் காவல்துறையிடம் பேசிய ஆதாரம் என்னிடமிருக்கிறது. 'பிரசாரத்திற்கு கரூர் வேலுச்சாமிபுர இடத்தை காவல்துறை கொடுத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் எந்தவித தொந்தரவுமில்லாமல் கூட்டத்தை நடத்திக் கொடுக்கிறேன். 10,000 பேர்தான் வருவார்கள். இந்த இடம் எங்களுக்குப் போதும்' என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நன்றி தெரிவித்து பேசினார் ஆனந்த். அவர் காவல்துறையிடம் கலந்து ஆலோசித்த வீடியோ இருக்கிறது.
அந்த இடத்தில் பல கேமராக்கள், ட்ரோன்கள், மீடியாவின் நேரடி ஒளிபரப்பு என நடந்தவை எல்லாம் கண்காணிப்பில் இருந்திருக்கின்றன. ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தனையும் இருந்தும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல அனைத்திற்கும் காரணம் திமுக அரசுதான் என்று பழிபோடுகிறார்கள்.

அடுத்தவர்கள் மீது பழிபோட்டுவிட்டு தப்பித்துக் கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தவறு செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்து இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் விஜய், தவெக கட்சியினர் மீதுதான் தவறு என்று கூறிவிட்டனர்.
அன்று 'பாசிசம், பாயாசம்' என்றெல்லாம் பாஜகவை விமர்சித்தவர்கள், இன்று ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆலோசனையில்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்" என்று விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார் வேல்முருகன்.