நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Albu...
StartUp சாகசம் 43: `25 வருட அனுபவம், 30 வகை பொருள்கள்' - இலவம் பஞ்சு பிசினஸில் கலக்கும் `NT மேஜிக்'!
இலவம் பஞ்சு என்பது வெப்பமண்டல மரமான இலவ மரத்தின் (Kapok Tree) காய்களில் இருந்து கிடைக்கும் இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஓர் இழை ஆகும்.
பருத்திப் பஞ்சை விட மிகவும் லேசாகவும், மென்மையாகவும், அடர்த்தி குறைவாகவும் காணப்படும். இதன் காரணமாக, இலவம் பஞ்சு மெத்தைகள் உடற்சூட்டை சமச்சீராக்கி, குளிர்ச்சி அடையச் செய்யும் தன்மை கொண்டவை.
இதனால் கோடைகாலங்களில் ஏற்படும் உஷ்ண நோய்கள் மற்றும் உடல்சூட்டுப் பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.
மேலும், இது உடலை வளையவிடாமல் சரியான ஆதரவை அளித்து, ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகிறது. முதுகுவலிப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

இலவம் பஞ்சு நீர் ஒட்டாத மற்றும் ஈரப்பதத்தை மேலாண்மை செய்யும் தன்மை கொண்டது (Water-resistant).
மேலும், இது இயற்கையாகவே பூஞ்சை, பூஞ்சைக் காளான், மற்றும் தூசிப் பூச்சிகளை (Dust Mites) எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இது நச்சுத்தன்மை இல்லாதது (Toxin-Free) மற்றும் செயற்கை ஃபோம் மெத்தைகள் போல ரசாயனம் அற்றது என்பதால், இது தோல் அரிப்பு போன்ற ஒவ்வாமைப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் (Value-Added Products):
இலவம் பஞ்சு மென்மை மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக நூல் நூற்கப் பயன்படாது என்றாலும், மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
அவை: படுக்கை மெத்தைகள், தலையணைகள், குழந்தைக்கான தொட்டில் மெத்தைகள், பயணத் தலையணைகள், யோகா தலையணைகள்.
இலவம் பஞ்சு லேசானதாகவும், நீர் ஒட்டாத தன்மையுடனும் இருப்பதால், இது உயிர் காக்கும் உறைகள் (Life Jackets) மற்றும் நீச்சல் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இலவம் விதைகளில் இருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்டு சோப்பு தயாரித்தல் மற்றும் உயவுப் பொருளாகவும் (Lubricating Oil) பயன்படுத்தப்படுகிறது.
ஃபோம் (Foam) போன்ற செயற்கை மெத்தைகள் உடல்சூட்டை அதிகரித்து, பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகளை (தோல் எரிச்சல், மலக்கட்டு, மூலம்) ஏற்படுத்தும் நிலையில், இயற்கையான இலவம் பஞ்சு மெத்தைகளுக்கான தேவை நுகர்வோர் மத்தியில் நிச்சயம் அதிகரிக்கும்.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட பொருள்களை மக்கள் நாடும் இன்றைய காலகட்டத்தில், குறைந்த கார்பன் சுவடு கொண்ட இலவம் பஞ்சு வர்த்தகம் சமூக நலன் சார்ந்த ஒரு வணிகமாகத் தனித்து நிற்கும்.
தேனி மாவட்டம், குறிப்பாக போடிநாயக்கனூர், தரமான இலவம் பஞ்சு உற்பத்திக்கு ஒரு பாரம்பரிய மையமாக இருப்பதால், மூலப்பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்தி இந்திய அளவில் சந்தையை விரிவாக்க முடியும்.
எனினும், இலவம் பஞ்சு விவசாயத்தின் பரப்பு குறைந்து கொண்டே வருவது ஒரு முக்கிய சவால் ஆகும். இதனால் எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலை உயரவும், பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்தச் சவாலான நேரத்திலும் தமிழ்நாட்டிலிருந்து 1999-ல் போடிநாயக்கனூரில் ஆரம்பிக்கப்பட்ட நித்யா டிரேடர்ஸ் எனும் நிறுவனம், இலவம் பஞ்சில் 30 வகையான பொருட்களை 'NT மேஜிக்' (NT MAGIC) என்ற பெயரில் இந்தியாவெங்கும் விற்பனை செய்து வருகிறது.
அந்நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் இப்போதைய மேலாண்மை இயக்குநர் வேங்கடபதி கிருஷ்ணமூர்த்தி சொல்லக் கேட்போம்.

உங்கள் நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? நீங்கள் பொறுப்புக்கு வந்தபின்னர் உங்கள் தொழிலை மேம்படுத்த செய்த முயற்சிகள் என்ன?
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இந்த வணிகத்தைத் தொடங்கியபோது, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தோம்.
குறிப்பாக, கொல்கத்தாவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு நாங்கள் பஞ்சு விநியோகம் செய்து வந்தோம்.
தமிழ்நாட்டிலிருந்து இருந்து மேற்கு வங்கத்திற்கு முதன் முதலில் இலவம் பஞ்சு அனுப்பியது எங்கள் தந்தைதான், அந்த வணிகம் சிறப்பாக வளர்ச்சியடைய ஆரம்பித்தபோது, எங்களுடைய தரமான தயாரிப்புகள் காரணமாக அங்கேயே நிறைய புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
அந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. சுமார் பத்து ஆண்டுகளில், ஒட்டுமொத்த மேற்கு வங்கம் முழுவதிலும் எங்களுடைய 'நித்யா டிரேடர்ஸ்' பிராண்டட் பொருள்கள் மட்டுமே செல்லும் அளவுக்கு நாங்கள் வளர்ந்தோம்.
அதன் பிறகு, மேலும் வணிகத்தை விரிவுபடுத்தலாம் என்று முடிவெடுத்தபோது, நாங்கள் எங்களுடைய வணிகத்தை கேரளாவுக்கும் நீட்டித்தோம்.
கேரளாவிலும் ஒரு சில குறிப்பிட்ட கடைகளுக்கு நேரடியாகப் பஞ்சு விநியோகம் செய்து வந்தோம்.

அங்குள்ள முக்கிய நகரங்களில், பஞ்சு விற்பனை அதிகமாக இருக்கும் இடங்களில், அதிக விற்பனைத் திறன் கொண்ட வல்லுநர்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களிடம் எங்களுடைய பிராண்ட் பொருட்களைக் கொடுத்து அங்கும் சந்தையை விரிவுபடுத்தினோம்.
பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் மெல்ல மெல்ல இந்த வணிகத்தை ஆரம்பித்தோம்.
தற்போது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக, யார் யாருக்கெல்லாம் பஞ்சு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு நாங்கள் விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இன்று 30க்கும் மேற்பட்ட பொருள்களோடு படிப்படியாக முன்னேறி வந்துள்ளோம்.
இப்போது நிறைய படுக்கைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உங்கள் படுக்கைகளின் வித்தியாசம் என்ன? இலவம் பஞ்சு மெத்தையில் தூங்குவதற்கும், செயற்கை பஞ்சு மெத்தையில் தூங்குவதற்கும் உள்ள ஏதேனும் வித்தியாசம் உண்டா?
இயற்கையானது. சூடு தராதது. உடலை வளையவிடாது, ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவி செய்யும். நீண்ட காலத்திற்கு உழைக்கும். மற்ற மெத்தையைப் போல் தண்ணீர் பட்டால் உடனே வீணாகப் போகாது. அதன் இயல்பிலேயே ஈரப்பதத்தை மேலாண்மை செய்ய உதவும்.
அதோடு, இலவம் பஞ்சினில் உள்ளே உள்ள ஃபைபர் (Fibre) விரிந்து கொடுக்கும். அதனால் நமக்கு முதுகு வலி வராது. குழந்தைகளுக்குத் தனியாக இலவம் பஞ்சு தொட்டில் மெத்தை, பயணத்திற்கான தலையணை, யோகா செய்யத் தனி தலையணை எனப் பல வகைகள் உள்ளது.
ஆனால், செயற்கையான முறையில் உருவாக்கப்படும் ரெக்ரான் (Recron) மற்றும் ஃபோம் (Foam) மெத்தைகள் இலவம் பஞ்சை விடக் குறைந்த விலையில் கிடைப்பதால், விலைப்போட்டி அதிகமாக உள்ளது. சமூக நலனில் இலவம் பஞ்சுதான் சிறந்தது. ஏனெனில், கார்பன் குறைப்பதிலும் இவை மிகக் குறைவானவை.

தமிழ்நாட்டில் மொத்த இலவம் பஞ்சு மெத்தையில் உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்ன? இந்திய அளவில் உங்கள் நிறுவனம் எவ்வளவு சந்தையைப் பெற்றுள்ளது?
போடிநாயக்கனூர் (போடி) இலவம் பஞ்சுத் தொழிலுக்குப் புகழ்பெற்ற பாரம்பர்ய மையமாகும். இந்தியாவிலேயே தரமான இலவம் பஞ்சு உற்பத்தியில் தேனி மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
போடி மலைப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேலாகவும் தமிழ்நாட்டில் 25,000 to 40,000 ஹெக்டேருக்கு மேலாகவும் இலவம் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்திய அளவில் இலவம் பஞ்சின் விலை போடியில்தான் முடிவு செய்யப்படுகிறது. 2000 லோடு (6 டன்) விதைப் பஞ்சாக விளையும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பிடித்துள்ளோம் என்று நம்புகிறோம்.
கேரளம், மேற்கு வங்கம், கர்நாடகம், தமிழகம் - இந்த நான்கு மாநிலங்களிலும் விற்பனை செய்யும் சிலரில் நாங்களும் ஒருவர். எங்களால் 100 லோடு வரை விதைப் பஞ்சை சுத்தமான பஞ்சாக மாற்ற இயலும்.
B2B, B2C, D2C முறையில் நாங்கள் பஞ்சாகவும், மெத்தையாகவும், தலையணையாகவும் மாற்றி விற்பனை செய்து வருகின்றோம். தமிழ்நாட்டில் முதல் 10 இடத்தில் நாங்களும் ஒருவராக இருப்போம்.
நீங்கள் பொறுப்புக்கு வந்தபின்னர் உங்கள் நிறுவனத்தில் நீங்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன? எப்படிச் சமாளித்தீர்கள்?
தலையணை, மெத்தை உற்பத்தி முழுவதும் மேனுவலாக (Manual) இருப்பதால் வேலையாட்கள் பிரச்னைதான் இதன் முக்கியப் பிரச்சினை. அதை எல்லாரையும்போல் வட இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு சமாளித்தோம்.
இன்னொருபுறம், தரம் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகக் கூடாது என்பதற்காக, ஒரு பொருளை யார் தயாரிக்கிறார்கள் என்பதை விற்கும் இடம் வரை அடையாளப்படுத்தினோம்.
இப்படித்தான் தரக்குறைபாடுகளை தரமேம்பாடாக மேம்படுத்தினோம். இப்போது எங்களுக்குச் சிக்கல் என்றால் இலவம் பஞ்சு விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மேம்படுத்த அரசும் எங்களோடு இணையவேண்டும்.
உங்கள் தற்போதைய விலை நிர்ணய உத்தியை (எ.கா., மதிப்பு அடிப்படையிலான, போட்டிச் சமநிலை) நீங்கள் விவரிக்க முடியுமா, மேலும் நுகர்வோருக்குக் கூடுதல் விலையாக இருந்தால் அதை எவ்வாறு அவர்களுக்குத் தெரிவிக்கின்றீர்கள்?
இது முற்றிலும் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால், விளைச்சலைப் பொறுத்து விலை இருக்கும். ஒரு வருடம் விளைச்சல் இல்லை என்றால், அது பரவலாகச் செய்திகள் மூலமாகவோ, வியாபாரிகள் மூலமாகவோ, கடைக்காரர்கள் மூலமாகவோ வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

‘இயற்கையானது’ என்பதைத் தவிர, ஆர்கானிக் காட்டன் அல்லது டென்செல் போன்ற பிரபலமான நீடித்த நிலைத்தன்மை கொண்ட போட்டியாளர்களுக்கு எதிராக உங்கள் வணிகத்தைப் பிரிக்க, கபோக்கின் (Kapok) குறிப்பிட்ட செயல்பாட்டு நன்மைகளை (எ.கா., பூச்சி எதிர்ப்பு, இரசாயனம் இல்லாதது) நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்?
இலவம் பஞ்சு அல்லது கபோக் மெத்தைகள் என்றும் அழைக்கப்படும் இலவம் பஞ்சு மெத்தைகள், கபோக் மரத்தின் விதை காய்களின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மெத்தைகள்.
அவை அவற்றின் லேசான, மிதக்கும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் பண்புகளுக்குப் பிரபலமானவை. 100% இயற்கை இலவம் பஞ்சிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது கையால் அறுவடை செய்யப்பட்டு, நீடித்து உழைக்கும் தன்மைக்காகக் கையால் திணிக்கப்பட்டுச் செய்யப்படுகிறது.
இந்த மெத்தைகள் வெப்பத்தைச் சிக்க வைக்கும் மெமரி ஃபோம் போலல்லாமல், உறுதியாகவும், சுவாசிக்கக்கூடியதாகவும் இருக்கும், அதே சமயம் ரசாயனம் இல்லாதவை, நச்சுத்தன்மையற்றவை, ஹைபோஅலர்கெனிக் மற்றும் தூசிப் பூச்சிகள், பூஞ்சை மற்றும் பூஞ்சைக் காளான் ஆகியவற்றை எதிர்க்கும்.
இலவம் பஞ்சு மெத்தைகள் சரியான முதுகெலும்புச் சீரமைப்பைப் பராமரிக்க உதவுவதாக அறியப்படுகிறது, இது முதுகு வலி அல்லது போஸ்டர் (Posture) பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
ஆனால் சந்தையை அதிகப்படுத்த எதிர்காலத்தில் நேரடி சப்ளைக்கு பதிலாக தமிழகம் முழுவதும் கிளைகளாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வணிகத்திற்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக (எ.கா., வள கிடைப்பது, ஒழுங்குமுறை மாற்றம் அல்லது பெரிய போட்டியாளரின் நுழைவு) நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
ஏசி பயன்பாடு பல மடங்கு அதிகரித்திருப்பதால், ஃபோம் (Foam) மெத்தையின் தீங்கை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. எங்கள் மெத்தையின் குளிர்ச்சியை அவர்களை உணர வைக்க எந்த விதமான முயற்சியும் நாங்கள் எடுக்காமல் இருப்பதுதான் தவறு என்று உணர ஆரம்பித்திருக்கிறோம்.
நிறைய சோஷியல் மீடியா பிரபலங்களைக் கொண்டு மல்டிநேஷனல் கம்பெனி தரும் விளம்பரங்கள்தான் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இது சமூக நலன் சார்ந்தது.
அரசாங்கம் இலவம் பஞ்சு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் மற்ற நாடுகளின் ஆதிக்கம் இங்கே அதிகரித்துவிடும். உண்மையில் சொல்லப்போனால், வங்கதேசம் நம்மை விடக் குறைவாகக் கொடுக்கிறார்கள் (விலை). அது மேற்கு வங்கம் வழியே தமிழகம் வர வாய்ப்பு உண்டு.
அப்போது இங்கே நமது வணிகம் குறையும். அதனால் இலவம் பயிரிடும் வாய்ப்பும் குறையும். எனவே நான் பார்ப்பது வளம் கிடைப்பதுதான் முதல் காரணம். இரண்டாவது பெரிய போட்டியாளர்கள் எங்களுக்கு அச்சுறுத்தல்தான். ஆனால் சந்தை அனைவருக்கும் ஆனது என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நீடித்த நிலைத்தன்மை கொண்ட இயற்கை இழைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் அரசாங்க முன்முயற்சிகளிடமிருந்து நிதிச் சலுகைகள் அல்லது ஆராய்ச்சி நிதியுதவியைப் பெற்றுள்ளீர்களா, அவ்வாறு பெற்றிருந்தால், அந்த மூலதனம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
இல்லை. அதுபோல் எந்வொரு அரசாங்கத்திடமிருந்தும் நிதிச்சலுகைகள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு உண்மை தெரியுமா? 2500 ரூபாய்க்கு மேலான மெத்தைகளுக்கு 18 சதவீத GST-ஐ குறைக்கச் சொல்லி மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்திருக்கிறோம். இதைக் குறைத்தால் எங்களுக்கு இன்னும் உதவும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலவம் பஞ்சு மெத்தைத்துறையின் சந்தை எங்கே இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், மேலும் அந்த எதிர்கால சந்தைத் தலைமை நிலையைப் பாதுகாக்க நீங்கள் இன்று என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்?
இலவம் பஞ்சின் மகத்துவம் முழுமையாகத் தெரிய வரும்போது, அப்போது மிகவும் கூடுதல் விலையை மக்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று அஞ்சுகிறோம்.
ஏனெனில், இலவம் பஞ்சின் விவசாயப் பரப்பு குறைந்து வருகிறது. இதன் மகத்துவம் தெரியும்போது விலை அதிகமாகும். அப்போது பெரும்பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய அளவில் இருக்கும்.
எனவே அரசாங்கமே நிறைய ஆராய்ச்சிகளையும், மேம்பாடுகளையும் செய்ய வேண்டுகிறோம். எதிர்காலத்தில், தனிப்பட்ட முறையில் ஃபிரான்சைஸ் (கிளை உரிமம்) அளித்து, எங்களுடைய பிராண்ட் தயாரிப்புகளை மேலும் பிரபலப்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
இந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, வெறுமனே பஞ்சு அரைத்துக் கொடுப்பதோடு எங்கள் வேலையை நிறுத்திக் கொள்ளாமல், மெத்தை மற்றும் தலையணை போன்ற தனிப்பட்ட தயாரிப்புகளையும் செய்து வருகிறோம்.
எங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்கும்போது, அவர்களுக்காக அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப (Customized) தயாரிப்புகளைச் செய்து கொடுக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டில் அளவு, வெவ்வேறு தேவைகள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான சிறப்புத் தன்மைகளுடன் கூடிய மெத்தை, தலையணை போன்றவற்றைச் செய்து தருகிறோம்.
குறிப்பாக, கர்ப்பிணிகளுக்குத் தேவையான மெத்தை, குழந்தைகளுக்குத் தேவையான மெத்தை, கைக்குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் வகையிலான மெத்தை எனச் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்பவும் தயாரித்து வழங்குகிறோம்.

எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ஆரம்பத்தில் ஒரே ஒரு வாடிக்கையாளருடன் ஆரம்பித்த இந்த வணிகம், இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு மாநிலம் முழுவதும் விரிவடைந்தது.
இப்போது தென்னிந்தியா முழுவதும், மேற்கு வங்கம் முழுதும் நாங்கள் எங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிளைகளிலும் (ஃபிரான்சைஸ்களிலும்) எங்களுடைய பொருட்களை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வருகிறோம்.
எங்களுடைய தரம்தான் மிக முக்கியமான வெற்றிக்குக் காரணம். இரண்டாவதாக, நாங்கள் மெத்தைகளைத் தேவைகளுக்கு ஏற்பத் தயாரிக்கும் போது, அந்த மெத்தைகள் நீண்ட உழைப்புடன் (Long-lasting) இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இதற்காக, மெத்தைக்குள் வைக்கப்படும் துணியின் தரத்தை நாங்கள் மிக மிக கவனமாகப் பார்க்கிறோம். அந்தத் துணியின் தரம்தான், மெத்தையின் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்கிறது.