Test Twenty என்பது என்ன? - கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!
Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது.
இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன.
இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'.

தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்!
இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது.
நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி.
சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள்.

ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன்.
தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே.
குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்.

கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு.
சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை.
‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம்.
‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது.
நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான்.