மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள...
ஆன்லைன் ஆர்டர்: 2 ஆண்டுகள் ஏமாற்றி ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்ட நபர் - சிக்கியது எப்படி?
ஜப்பானில் உள்ள பிரபல உணவு டெலிவரி செயலி ஒன்றில், 'ஆர்டர் செய்த உணவு வரவில்லை' எனப் பொய் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,095 முறை பணத்தைத் திரும்பப் பெற்று, ரூ.21 லட்சம் மதிப்புள்ள உணவை உண்டு ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நகோயா நகரைச் சேர்ந்தவர் டகுயா ஹிகாஷிமோடோ. வேலையில்லாமல் இருந்த இவர் 'Demae-can' என்ற பிரபலமான உணவு டெலிவரி செயலியில் ஒரு நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
விலையுயர்ந்த உணவுகளை அந்த செயலியில் ஆர்டர் செய்து, பின்னர் உணவு டெலிவரி செய்யப்பட்டவுடன், தனக்கு உணவு வந்து சேரவில்லை என்று செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதனை நம்பிய அந்த நிறுவனம், அவர் செலுத்திய பணத்தை அவருக்குத் திருப்பி வழங்கிவிடுகிறது. இதன் மூலம் பணத்துடன் உணவையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாகப் பெற்று இருக்கிறார் அந்த நபர்.
இப்படி 1,095 முறை மோசடி செய்து, நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.21 லட்சம் (3.7 மில்லியன் யென்) வரை இழப்பீட்டை ஏற்படுத்தியிருக்கிறார்.
நிறுவனத்தின் பிடியில் சிக்காமல் இருக்க, இவர் 124 போலி சிம் கார்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் வெவ்வேறு பெயர்களிலும் முகவரிகளிலும் கணக்குகளைத் தொடங்கி இந்த மோசடியைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 30 அன்று அவர் வழக்கம் போல் ஆர்டர் செய்துவிட்டு பணம் திரும்பக் கேட்டபோது, நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனம் நடத்திய விசாரணையில், ஹிகாஷிமோடோவின் தொடர் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. நிறுவனம் காவல்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.