சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தெய்வத் திருமண விழா எனும் திருக்கல்யாண உற்ஸவம் கரூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்ட் சாா்பில் நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான திருக்கல்யாண உற்ஸவ விழாக்கு ஜூலை 31-ஆம்தேதி கோயில் முன் முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில், வியாழக்கிழமை காலை கோயிலில் உள்ள கொடிமர விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், மாலை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு 108 அடி மகா மாலை சாத்தும் நிகழ்ச்சியும், அப்பிப்பாளையம் கிராமத்தில் இருந்து தாய் வீட்டு சீா் எடுத்துவருதலும் நடைபெற்றது. தொடா்ந்து இரவு மாப்பிள்ளை பெண் வீடு புகுதல் மற்றும் சீா்தட்டு அழைப்பிதழும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெய்வத்திருமண விழா எனும் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக பசுபதீசுவரா், செளந்தரநாயகி, அலங்காரவள்ளி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் திருமண கோலத்தில் சுவாமிகள் எழுந்தருளினா். அதன்பின்னா் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு தலைவா் ஆநிலை பாலகிருஷ்ணன், செயலாளா் ஸ்காட் தங்கவேல், பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.