காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமார்
காஞ்சிபுரம்: இனி வரும் காலங்களில் கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தலை பொருத்தவரையில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவின்படி நடந்து கொள்வோம் என கர்நாடக் துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்தார்.
ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரித்திங்கரா தேவி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காஞ்சிபுரம் வருகை தந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வேண்டிக் கொண்ட நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் வருகை தந்த டி. கே. சிவகுமார் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். உலக நன்மை வேண்டி சக்கரத்தாழ்வார் சன்னதியில் கோ பூஜை மற்றும் மகா சுதர்சன யாகம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிக்க |பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சைப் பேச்சு!
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஆறு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர வருவாய்த் துறை அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் தெரிவித்துள்ள நிலையில், திருப்பதி இறப்பு குறித்து எந்தவித கருத்து கூற விரும்பவில்லை, அது அந்த மாநிலத்தினுடைய சட்டம்- ஒழுங்கு பிரச்னை என்றார்.
மேகதாது அணை பிரச்னையில் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு உதவியாகவும் போராடி வருகிறோம். இதனை அரசியல் கட்சிகளும் அறியும். ஆகவே நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கும். ஏற்கனவே 465 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அதனை சேமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது.
நேற்று சரணடைந்த ஆறு நக்சலைட்டுகள் விவகாரத்தில் மூன்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இனி வரும் காலங்களில் கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்.
மேலும் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ பொருத்தவரையில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவின்படி நடந்து கொள்வோம் என்றார்.