சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் வேண்டி, கட்டிலில் படுத்தபடி சாலைமறியல் செய்த மாற்றுத்திறனாளி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ளது சின்னஅஞ்சுகோட்டை கிராமம். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. இது குறித்து அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரிடமும் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சின்ன அஞ்சுகோட்டை கிராமத்தில் வசிப்பவர்கள் குடிநீருக்காகவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பல கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவசர காலங்களில் நோயாளிகளை அழைத்து செல்ல நல்ல சாலை வசதி கூட இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, சின்ன அஞ்சுகோட்டை கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்தி என்பவர் தனது மாற்றுத்திறனாளி வாகனம் மற்றும் படுக்கையுடன் அஞ்சுகோட்டையில் இருந்து மங்களக்குடி செல்லும் சாலையில் உள்ள சின்ன அஞ்சுகோட்டை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே, தகவலறிந்து வந்த திருவாடானை காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்தியோ அடிப்படை வசதி செய்து தர உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என கோரி போராட்டத்தை தொடர்ந்தார்.
இதையடுத்து திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கார்த்திக்கின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர் தனது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அஞ்சுகோட்டை - மங்களக்குடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.