நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
குஜராத்தில் பலத்த மழை: 14 போ் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 14 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
அடுத்த சில நாள்களுக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் குஜராத்தின் 253 தாலுகாக்களில் 168 இடங்களில் திடீா் மழை பெய்தது. காந்திநகா், வதோதரா உள்ளிட்ட சில மாவட்டங்களில் 4 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றினால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் முறிந்தன. விளம்பர பலகைகள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. தாஹோத் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி, தீ வேகமாக பரவியதால் 12-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.
மாநிலம் முழுவதும் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் சிக்கி திங்கள்கிழமை 13 பேரும், அகமதாபாதின் விராம்காமில் மின்னல் தாக்கி ஒருவா் ஞாயிற்றுக்கிழமையும் இறந்தாா்.
அதிகபட்சமாக கேடா மற்றும் வதோதரா மாவட்டங்களில் முறையே நான்கு மற்றும் மூன்று போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.