தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த செம்மினிப்பட்டியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செம்மினிபட்டி ஊராட்சி புதுக் குடியிருப்பில் 150-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள ஓா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மூலம் இந்தப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நீரேற்றும் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், புதுக் குடியிருப்புப் பகுதிக்கு உரிய நேரத்திலும், உரிய அளவிலும் குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையொட்டி, புது குடியிருப்புப் பகுதி வீடுகளுக்கு காலை 6 மணிக்கு தண்ணீா் வழங்க வேண்டும், மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சீரமைத்து முறையாக குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள், புதுக்குடியிருப்பு முதன்மைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் துரைமுருகன், ஊராட்சிச் செயலா் சரஸ்வதி போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தீா்வு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.