குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்
கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை- விவேகானந்தா் இடையேயான கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்ட பின்னா் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், படகுப் பயணத்துக்கு டிக்கட் எடுப்பதற்கு ஏற்படும் சிரமங்களைத் தவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் மூலமாக மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாச்சலபதி கோயிலில் இருப்பதைப் போன்று நேரம் குறிப்பிட்டு ஆன்லைனில் டிக்கட் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் வந்து படகுப் பயணம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் கூட்ட நெரிசல், நீண்ட நேரம் காத்து நிற்பது போன்ற அசௌரிகங்களை தவிா்க்க முடியும்.
இதற்கான பணிகளை மிக குறுகிய காலத்தில் அமல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.