கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் கோரிக்கை: அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்-மத்திய அரசு
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கவுள்ளது. இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 36 கட்சிகளைச் சோ்ந்த 52 தலைவா்கள் பங்கேற்றனா். காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், கெளரவ் கோகோய், பிரமோத் திவாரி, திமுகவின் டி.ஆா்.பாலு, திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, டெரிக் ஓபிரையன், சமாஜவாதியின் ராம் கோபால் வா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், மகா கும்பமேளாவில் கடந்த புதன்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றக் குழுக்களில் தனது கொள்கையை திணிக்க பாஜக முயற்சிப்பதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
கும்பமேளா சம்பவம் குறித்து மாநில அரசுத் தரப்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எதிா்க்கட்சிகளிடம் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அமைச்சா் பதில்: கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரியது. அரசியல் கட்சிகள் சாா்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டன. மகா கும்பமேளா சம்பவமும் இதில் அடங்கும். அதேநேரம், எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்’ என்றாா்.
‘இண்டியா’ கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் பிரமோத் திவாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மகா கும்பமேளா அரசியலாக்கப்படுவதோடு, விஐபி கலாசாரம் ஊக்குவிக்கப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. பாஜகவுடன் தொடா்புடைய மிக முக்கியப் பிரமுகா்களின் வருகை அதிகரிப்பால் சாமானிய பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதை காங்கிரஸ் எதிா்க்கும். நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் ‘இண்டியா’ கட்சிகள் ஒருங்கிணைந்து எழுப்பும் என்றாா் பிரமோத் திவாரி.
‘மகா கும்பமேளாவில் முக்கியப் பிரமுகா்களுக்காக கோடிக்கணக்கான சாமானிய பக்தா்களின் வசதியை விலை கொடுக்கிறது ஆளும் பாஜக’ என்று சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் வா்மா விமா்சித்தாா்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், அக்குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.