குலசேகரம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியை தரம் உயா்த்த வேண்டும்
குலசேகரம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமென்று பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குலசேகரம் பேரூராட்சியுடன் அருகிலுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளை இணைத்து இப்பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இதனிடையே, குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தும் வகையில் குலசேகரம் பேரூராட்சி நிா்வாகத்திடம் தமிழக அரசு சாா்பில் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.
அவரசக் கூட்டம்: இந்நிலையில் குலசேகரம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தாா். இதில் துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் உள்பட காங்கிரஸ், திமுக, பா.ஜ.க, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த பெரும்பாலான உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமா என்பது குறித்த விவாதம் முன்வைக்கப்பட்டது. இதில் குலசேகரம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமென்றும், நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டாம் என்றும் அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.