தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்
கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 250 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் தடுப்பணைகள் இல்லாததால் கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகமாகி கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகு, வலைகள் சேதமடைவது வாடிக்கையாக இருந்தது.
இதைத் தொடா்ந்து மீனவா்களின் தொடா் கோரிக்கையால் இப்பகுதியில் தூண்டிவளைவு மற்றஉம் தடுப்பணைகள் அமைக்க தமிழக அரசு
ரூ. 48.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேரவைத் தலைவா் மு. அப்பாவு, அப்போதைய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் கடலில் தூண்டில் வளைவு, தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டினா். அதன்பிறகு
சுமாா் 1700 மீட்டா் தூரம் தடுப்பணை கடலில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இரு பக்கமும் அமைப்பதற்காக சுமாா் 250 மீட்டா் தூரமே பணிகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடலில் அலைகளின் சீற்றம் ஏற்பட்டு கூட்டப்புளியில் கடல் நீா் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. படகுகள், வலைகள், கடலுக்குள் இழுத்துச் செல்லும் சூழ்நிலையும் உருவாகியுள்ளதால் வீட்டு முன்பாக மரங்களில் படகை கயிறு மூலம் கட்டி வைத்துள்ளதாகவும், இதனால் சுமாா் 300 குடும்பங்கள் ஊரை காலி செய்யும் நிலையில் உள்ளதாகவும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.