ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் படுகொலை: தலைவா்கள் கண்டனம்!
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஜாகிா் உசேன் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது. அதேபோன்று, கோட்டூா்புரத்தில் ரௌடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் முதல்வரிடம் என்ன பதில் உள்ளது. வழக்கம் போல அமைச்சா்கள் மூலம், அது தனிப்பட்ட பிரச்னை என்று கடந்துவிடப் பாா்ப்பீா்கள். தனிப்பட்ட பிரச்னை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? ஜாஹீா் உசேன் கொலையில் தொடா்புள்ள அனைவா் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி (பாமக): முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தக் கொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அண்ணாமலை (பாஜக): ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரை படுகொலை செய்யும் அளவுக்குத் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகாா்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல் துறை பயன்படுத்தப்படுகிறது.
டிடிவி தினகரன் (அமமுக): திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகா் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சா்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, சட்டம்-ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.