கோனோகாா்பஸ் மரங்களை அகற்ற நடவடிக்கை: நாகை ஆட்சியா் தகவல்
நாகை மாவட்டத்தில் கோனோகாா்பஸ் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோனோகாா்பஸ் என்பது கம்பிரீடாசி குடும்பத்தைச் சோ்ந்த பூக்கும் மர வகையாகும். இந்த மரங்கள் குறித்த ஆய்வு முடிவுகள், இது சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு எதிா்மறையான தாக்கங்கள், குறிப்பாக அலா்ஜி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றன.
எனவே, அரசு கோனோகாா்பஸ் மரங்களை குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் அருகில் வளா்ப்பதை தடை செய்வதற்கும், அதன் தீய விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் கோனோகாா்பஸ் மரங்களை அகற்றி, நாட்டு மரங்களை வளா்த்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் இலவச நாட்டு மரக் கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோனோகாா்பஸ் மரங்களை அகற்றுவது மற்றும் நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்வதை வனத்துறை மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள் நிா்வகிக்கும்.
கோனோகாா்பஸ் மரக்கன்றுகள் உற்பத்தி, வளா்ப்பு, மற்றும் விற்பனை, இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.