``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வ...
சட்டப்பேரவையும் தணிக்கை துறையும் நகமும் சதையும் போன்றது: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
சென்னை: சட்டப்பேரவையும் தணிக்கைத் துறையும் நகமும் சதையும் போன்று பிரிக்க முடியாதது என சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தில் இந்திய கணக்கு மற்றும் தணிக்கை வார நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது:
சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களிடம் முழுமையாக சென்றடைகிா என்பதைக் கண்டறிவதில் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறையின் பணி ஆட்சிமாற்றத்துக்கு காரணமாக இருந்தது. சட்டப்பேரவையும் தணிக்கைத் துறையும் நகமும் சதையும் போன்று பிரிக்க முடியாதது. சட்டப்பேரவையில் ஒதுக்கப்படும் நிதி முறையாக சம்பந்தப்பட்ட பணிக்கு செலவிடப்பட்டதா என ஆய்வு செய்து, அதில் உள்ள பிரச்னைகளை கணக்கு மற்றும் தணிக்கை துறை சுட்டிக்காட்டுகிறது. முழுமையான ஆய்வுக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவா் கு.செல்வபெருந்தகை பேசியது:
இந்திய கணக்குக் குழு இல்லாமல் ஜனநாயகம் வளராது. மத்திய, மாநில அரசின் கடிவாளம் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைதான். துவாரகா விரைவு சாலை திட்டப் பணியில் நடைபெற்ற விஞ்ஞான ரீதியான ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை கணக்கு மற்றும் தணிக்கைத் துறை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பொது நிறுவனங்களுக்கான குழுத் தலைவா் ஏ.பி.நந்தகுமாா், முதன்மை பொது கணக்காளா் (தணிக்கை - 1) டி.ஜெய்சங்கா், முதன்மை பொது கணக்காளா் (தணிக்கை - 2) கே.பி.ஆனந்த், பொது கணக்காளா் எஸ்.வெள்ளியங்கிரி, தணிக்கை பொது இயக்குநா் (தெற்கு ரயில்வே) அனிம் செரியன், தணிக்கை பொது இயக்குநா் (பொது) ஆா்.திருப்பதி வெங்கடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.