`90 நாள்களுக்கு கறுப்பு நிற உடைகளை அணியுங்கள்' - தாய்லாந்து அரசு பரிந்துரை
சமூக ஆர்வலர் கொலை வழக்கு; குவாரி உரிமையாளர்கள் மீது குண்டாஸ்; ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
விதிமீறல் குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் அதிமுக-வைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் பகுதியில் சடவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, குவாரிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் உத்தரவு பெற்றார். இதனால் குவாரி உரிமையாளர்கள் அவரை மிரட்டி வந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிக்லை. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி ஜெகபர் அலி இறந்தார்.

இது திட்டமிட்ட கொலைதான் என்று பல்வேறு கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் தீவிர போராட்டம் நடத்திய பிறகு மிரட்டல் விடுத்த கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமய்யா, தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்பு வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. முருகானந்தம், ராமய்யா, ராசு ஆகியோர் கடந்த பிப்ரவரி 22 -ல் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.
தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேற்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரணை நடத்தியதில் "குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை மீறப்படவில்லை, மனுக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றவை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிடப்பட்டது.


















