சரக்கு ஆட்டோ - லாரி மோதல்! 3 இளைஞர்கள் பலி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே நள்ளிரவில் சரக்கு ஆட்டோவும், லாரியும் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானது குறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரமேஷ் (30). ஆட்டோ ஓட்டுநர். இவர் வெள்ளிக்கிழமை ஈரோடு அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு மணவரை அலங்கார பொருள்களை ஏற்றிச் சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறக்கி வைத்து விட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தார்.
சரக்கு ஆட்டோவில் அலங்கார வேலைக்காகச் சென்ற சிறுகிணத்துபாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் சக்திநாதன் (18), கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் சிவா (19), அதேப் பகுதியைச் சேர்ந்த பூபதி மகன் பூமேஷ் (20) மற்றும் வெங்கரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்துள்ளனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் அருகே வந்து கொண்டு இருந்த போது பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி எதிரே வந்த லாரியும் சரக்கு ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது. இதில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
இதில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திநாதன் மற்றும் சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து படுகாயம் அடைந்த பூமேஷ், ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் மற்றும் சாமிநாதன் (42) ஆகிய மூன்று பேர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று பேர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் பூமேஷ் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.