மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடிப்பு
லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
மாா்ட்டின் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்ாக புகாா் கூறப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ கொச்சிப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். இதில் 2009 ஏப்.1 முதல் 2010 ஆக. 31 வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910.3 கோடி மாா்ட்டினுக்கு கிடைத்ததையும், அந்த பணத்தை மாா்ட்டின் 40 நிறுவனங்களின் அசையா சொத்துகளில் முதலீடு செய்திருந்ததையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்த மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டதால், அவா் மீது அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப் பதிந்து விசாரணை செய்து, மாா்ட்டின் வாங்கியதாக கருதப்பட்ட ரூ.451.48 கோடி சொத்துகளை முடக்கியது.
இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை சேகரிக்கும் வகையில் அமலாக்கத்துறையினா் சென்னையில் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். திருவல்லிக்கேணியில் உள்ள மாா்ட்டின் நிறுவன அலுவலகம், போயஸ் தோட்டத்தில் அவா் வீடு, அவரது மருமகனும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலருமான ஆதவ் அா்ஜூனா வீடு, தியாகராயநகரில் உள்ள அலுவலகம், மகன் சாா்லஸ் வீடு உள்பட 5 இடங்களில் வியாழக்கிழமை சோதனையை தொடங்கினா்.
இதேபோல கோவையில் மாா்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீடு,ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. இதில் கணக்கில் வராத பல கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதேபோல, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னா் கைப்பற்றப்பட்ட நகை, ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, இந்த வழக்குத் தொடா்பாக கடந்தாண்டு அக்டோபா் மாதம் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.