காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளிகள்! 4 வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
வடகிழக்கு மாநிலமான அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளிகளை மீட்கும் பணி 4 வது நாளாக இன்று (ஜன.9) தொடர்கிறது.
கடந்த திங்களன்று (ஜன.6) உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதனுள் இருந்த 9 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். அன்று முதல் அவர்களை மீட்க இந்திய ராணுவப்படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையைச் சார்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஜன.8) காலை சுரங்கத்தினுள் நீந்தி சென்ற மீட்புப் படையினர் 85 அடி ஆழத்தில் பலியான ஒரு தொழிலாளியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் நேபாளத்தைச் சேர்ந்த கங்கா பகதூர் செஸ்தோ என்பது தெரிய வந்தது.
இருப்பினும், மீதமுள்ள 8 தொழிலாளிகளின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை தெரிவியவில்லை. அந்த சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ரிமோட்டால் இயக்கப்படும் சிறிய ரக வாகனம் ஒன்று அதனுள் அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க:திருப்பதி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
ஆனால், சுரங்கத்திலுள்ள தண்ணீர் நிலக்கரியால் கருநிறமாக மாறியுள்ளதால் அந்த வாகனத்தின் கேமரா மூலமாகவும் தொழிலாளிகளைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த சுரங்கத்தினுள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற ’கோல் இந்தியா’ சார்பில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து நிமிடத்திற்கு சுமார் 500 கலோன் அளவிலான தண்ணீரை வெளியேற்றக் கூடிய அதிக அழுத்தம் கொண்ட பம்ப் கொண்டு வரப்படவுள்ளது.
முன்னதாக, விபத்து நிகழ்ந்துள்ள நிலக்கரி சுரங்கமானது பல்வேறு குறுகிய பாதைகள் உருவாக்கப்பட்டு நிலக்கரி எடுக்கப்படக்கூடிய எலிவளைச் சுரங்கம் வடிவிலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எலிவளைச் சுரங்கத்தை ஏற்கனவே இந்திய அதிகாரிகள் தடை செய்திருக்கும் நிலையில் விபத்து நிகழ்ந்த சுரங்கம் சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறப்படுகிறது.