செங்கல்பட்டு: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பெண்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்; நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கிறது பண்டிதமேடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த லோகாம்பாள், யசோதா, ஆனந்தம்மாள், கௌரி மற்றும் விஜயா உள்ளிட்டவர்கள், இன்று (நவம்பர் 27) காலையில் தங்கள் மாடுகளை மேய்ப்பதற்காகச் சாலைக்கு அந்த பக்கம் ஓட்டிச் சென்றனர். மதியம் வரை மாடுகளை மேய்த்த அவர்கள், அதன்பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்காகச் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கம் அதிவேகமாகச் சீறிக் கொண்டு வந்த கார் ஒன்று, இந்த 5 பேர் மீதும் மோதியது.
அதில் அந்த 5 பேரும் பல அடி தூரத்திற்கு, நான்குபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அடுத்த சில விநாடிகளில் அந்த 5 பெண்களும் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தை அடுத்து, விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாகச் சென்றது. சிறிது தூரத்திலேயே, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேறு ஒரு வாகனத்தில் மோதி அந்த கார் நின்றது. உடனே காரில் இருந்தவர்கள் தப்பித்து ஓட முயற்சி செய்தனர். ஆனால் விபத்தைப் பார்த்த பொதுமக்கள் அந்த காரை விரட்டி வந்ததால், காரில் இருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த மற்ற இருவர் தப்பித்துவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட இருவரை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். இந்த விபத்து குறித்துக் கேள்விப்பட்டு அங்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸார், இருவரையும் மீட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அதில் கோபடைந்த மக்கள், அவர்களை இறக்கி விடுமாறு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சாய் பிரனீத் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அவரிடமும் விபத்து ஏற்படுத்தியவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும், தப்பியோடியவர்களை உடனடியாகப் பிடிக்குமாறும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய எஸ்.பி சாய் பிரனீத், நிவாரணத் தொகை குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதன்பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், ``விபத்து ஏற்படுத்தியவர்கள் பையனூரில் இருக்கும், அறுபடை வீடு கல்லூரியில் சட்டம் படித்து வரும் மாணவர்கள். திருப்போரூரிலிருந்து கல்லூரிக்கு அதிவேகமாகச் சென்றபோதுதான் இந்த விபத்து நடைபெற்றது. அதிக வேகத்தில் வந்ததால் அவர்களால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அனைவரும் மது போதையிலும் இருந்தனர்” என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...