நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Albu...
சென்னையில் நடக்கப் போகும் மாபெரும் 'விண்டெர்ஜி இந்தியா 2025' மாநாடு!
காற்றாலை எரிசக்தித் துறையின் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டின் 7-வது ஆண்டு நிகழ்வு (Windergy India 2025) சென்னையில் வரும் அக்டோபர் 29–31 ஆகிய நாள்களில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை இந்திய விண்ட் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் PDA Ventures பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த மாநாட்டை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி மற்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாய்க் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைக்கிறார்கள்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350–க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்கிறார்கள். 15,000க்கும் மேலானோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த அரசாங்க கொள்கைகள் பற்றிய உரையாடல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. டென்மார்க் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் சர்வதேச கண்காட்சி அரங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் இருந்து பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா, இப்போது உலக அளவில் காற்றாலை ஆற்றலில் 4-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முதல் இடம். 2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவின் காற்று எரிசக்தி திறன் 53 GW, தேசிய இலக்கான 150 GW ஆற்றல் உற்பத்தியை விரைவில் இந்தியா அடைவதற்கு இந்த Windergy India 2025 மாநாடு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்த மத்திய அரசும் சில திட்டங்களை அறிவித்து வருகிறது.
சமீபத்தில் அமலுக்கு வந்த GST 2.0 சீர்திருத்தத்தின் மூலம் காற்று சக்தி உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி-யை12% இருந்து 5% ஆகக் குறைத்துள்ளது இந்திய அரசு.
இந்திய விண்ட் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தலைமை செயல் அதிகாரி ஆதித்ய பியாசி கூறும்போதும்,“காற்று சக்தி என்பது ஒரு தூய்மையான சக்தி மட்டுமல்ல, அது நாட்டின் சுயசார்பு நிலைத்தன்மையின் அடிப்படைத் தூண் ஆகும். அந்த நிலையை நோக்கி நகர்வதற்கு இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும்”, என்றார்

சமீபத்தில் Windergy India 2025 மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய PDA Ventures நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ப்ரதீப் தேவ்யா “இந்தியா தனது எரிசக்தி இலக்கை விரிவுபடுத்தும் போது, நிறுவனங்கள் பலவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முன்வரும், இதன் மூலம் புதிய வணிக வாய்ப்புகள் திறக்கும்" என்றார்.
நிகழ்வில் கலந்துகொண்ட நார்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேசும்போது, “வெர்டிக்கல் விண்ட்மில், டபுள் டர்பைன் போன்ற பல தொழில்நுட்பங்கள் இன்னமும் ஆராய்ச்சியிலும் , சோதனையிலும்தான் இருக்கின்றன. இந்த நிகழ்வின் மூலம் இதுபோன்ற புதிய கண்டிபிடிப்புகள் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தத் துறையின் வளர்ச்சியினால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். சமீபத்தில் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள புதியத் தொழில் திட்டத்தால் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதுபோல மற்ற நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புப் பெருக இந்த நிகழ்வு உதவியாக இருக்கும்” என்றார்.
இந்த மாநாட்டை Suzlon Energy Limited, Envision Energy, Senvion India, GE Vernova, Renfra Energy, Winergy, Globe Ecologistics, Exxon Mobil, Nexhs Renewables, Leap Green Energy, UL Solutions, Latent Landinfra போன்ற பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.
காற்றாலை ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த தொழில்களிலும், அது சார்ந்த கல்வியிலும் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்கும் இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.