சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி!
சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக... அவரின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு பணியிலிருந்த போலீஸார், சிறுமியின் பெற்றோரை அவதூறாகப் பேசியதாகவும் தாக்கியதாகவும் குற்றம்சுமத்தப்பட்ட சிறுவனின் பெயரை நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். வீடியோ வைரலானதையடுத்து சென்னை போலீஸ் உயரதிகாரிகள், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிறுமியின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழகத்தி்ல் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஜய்மன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா உள்பட 7 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் சிறுமி, அவரின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்த கொடுமைக்கு தண்ணீர்கேன் போடும் சிறுவன், இளைஞர் குறித்த தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஏற்கெனவே சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜி என்பவர் மீது குற்றம்சுமத்தியிருந்தனர். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர்.
விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராஜி மீது சிறுமியின் பெற்றோர் அளித்த குற்றச்சாட்டுகள் உண்மையென தெரியவந்தது. அதோடு இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ராஜி சரிவர விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜியை போலீஸார் கைதுசெய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜியிடம் நடுவான்கரை பகுதியைச் சேர்ந்த அதிமுக 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர், சிறுமி குற்றம்சுமத்தியவர்களுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ராஜியுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. அதனால் அவரையும் இந்த வழக்கில் போலீஸார் கைதுசெய்தனர். சிறுமி பாலியல் வழக்கில் அ.தி.மு.க பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதுசெய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜி, அ.தி.மு.க பிரமுகர் சுதாகர் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்`காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிபதி ராஜலட்சுமியிடம் கைதான இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அ.தி.மு.க பிரமுகர் சுதாகர் கைதுசெய்யப்பட்டதும் அவரை கட்சியிலிருந்து அ.தி.மு.க தலைமை நீக்கியுள்ளது. அதைப் போல இன்ஸ்பெக்டர் ராஜி மீது துறைரீதியான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவில் உள்ள அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சிறுமி பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் நேரடி பார்வையில் நடந்து வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ளவர்கள் இந்த வழக்கில் உள்ள தகவல்களை வெளியில் சொல்லக் கூடாது. ஏற்கெனவே சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவனுக்கு அ.தி.மு.க பிரமுகர் சுதாகர், அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக இன்ஸ்பெக்டரிடம் அ.தி.மு.க பிரமுகர் பேசியிருக்கிறார். அதனால்தான் இந்த வழக்கில் இருவரையும் சேர்த்திருக்கிறோம். விரைவில் விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்" என்றார்.