'தொகுதி மறுசீரமைப்பு செய்தால் எங்கள் குரல் நசுக்கப்படும்' - திருச்சி சிவா பேட்டி
தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வியை திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) முன்வைத்தாா்.
இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: வடாரண்யேஸ்வரா் கோயில் என்பது பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்ன சபை என்று அழைக்கப்படும் கோயிலாகும்.
காரைக்கால் அம்மையாா் இல்லற வாழ்வை துறந்து துறவியாக முக்தி பெற்ற திருக்கோயில் என்பதால் ஐதீகப்படி திருமணம் போன்ற சுப காரியங்கள் இந்தக் கோயிலை மையப்படுத்தி நடந்தது இல்லை. எனவே, சுப நிகழ்ச்சிகள் நடத்தாத சூழ்நிலையில் திருமண மண்டபம் அங்கு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
அதேநேரத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 85 திருக்கோயில்களுக்கு சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், ரூ.4.20 கோடியில் நான்கு புதிய திருக்குளங்கள் உருவாக்கப்பட்டதுடன், ரூ.120 கோடியில் 220 திருக்குளங்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.