சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
"தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ
"திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், "அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். முன்னதாக மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

புதுக்கட்சியான தவெக-வின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் விமர்சனம் செய்ய முடியாது. தவெக நிர்வாகிகள் எடுக்கக் கூடிய முடிவுக்கு நாங்கள் கருத்து செல்வது சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர் பணியைச் சரியாகச் செய்யும் எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.
திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மதுரை மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் நான் பேசினால் அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்.
திமுக தொண்டர்களைக் குஷிப்படுத்தவே அதிமுகவை விமர்சனம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவாகப் பேசினார். அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவ்வாறுதான் இருந்தார்கள். அவர்கள் வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகிறார்.
அரசியல் அடையாளத்துக்காக டிடிவி தினகரன் பேசுகிறார். டிடிவி தினகரன் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது என்பதால் திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூட்டணி முடிவுகளை எடுக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவே அதிமுக-வின் நிலைப்பாடு.
விசிக தலைவர்களை திருமாவளவனால் ஒருமுகப்படுத்த முடியவில்லை, அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். முன்பிருந்த திருமாவளவனாக இப்போதில்லை. மதுரை மாநகராட்சியில் 69 உறுப்பினர்கள் வைத்துள்ள திமுகவால் புதிய மேயரை நியமிக்க முடியவில்லை.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து செயல்படாமல் இருக்கிறது. திமுக மாமன்ற உறுப்பினர்கள் லெக்செஷன், கரப்சனாக உள்ளதால் புதிய மேயரை திமுகவால் தேர்வு செய்ய முடியவில்லை. புதிய மேயர், மண்டலத் தலைவர்கள், நியமனக்குழு தலைவர்களைத் தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு வந்த சோதனை" என்றார்.















