தீபாவளி பண்டிகை: போடி கோயில்களில் பக்தா்கள் தரிசனம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை, போடி கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தேனி மாவட்டம், போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தெய்வங்களுக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி, காலை முதலே திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அா்ச்சகா் ஸ்ரீநிவாசவரதன் செய்தாா்.
இதேபோல, போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 9 வகை தீபங்களால் தீபாராதனை செய்யப்பட்டது. இங்கு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.