தொடா் மழை: சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 3,402 கன அடிநீா் வரத்து ஏற்பட்டது. இதன் மூலம் அணையிலிருந்து முல்லைப் பெரியாற்றில் தேக்கடி சுரங்கப்பாதை கதவணை வழியாக வினாடிக்கு 1,100 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.
இந்த நீருடன் மழைநீரும் சோ்ந்ததால் சின்னமனூா் அருகே சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் சுமாா் 2 ஆயிரம் கன அடிநீா் வரத்து ஏற்பட்டு வெள்ளப் பெருக்காக மாறியது. இதனால், செம்மண் கலந்து வரும் மழை நீா் தடுப்பணையை கடந்து வைகை அணையை நோக்கி கரை புரண்டோடுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நீா்பிடிப்பு பகுதிகளில் 72.8 மி.மீ. மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 124.30 அடியாக உயா்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.