நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊராட்சி மக்கள் சாலை மறியல்
மன்னாா்குடி அருகே ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிபிஎம் கட்சியினா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மன்னாா்குடி நகராட்சி எல்லையையொட்டி ராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூா் கிராமம் உள்ளது. இந்த கிராமம் மன்னாா்குடி நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் பகுதி, நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் நூறுநாள் வேலைத் திட்டம் நிறுத்தப்படுவதுடன் பல்வேறு வரிகளும் உயரும் எனக் கூறி, இணைப்பை கைவிட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 6-ஆம் தேதி வாஞ்சியூா் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனா். தொடா்ந்து, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலை வாஞ்சியூா் பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் திரண்டனா். அவா்களை, மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்த வரும்படி, டிஎஸ்பி டி. பிரதீப், வட்டாட்சியா் என். காா்த்திக் ஆகியோா் அழைத்தனா். ஆனால், பெரும்பாலானோா் இந்த அழைப்பை ஏற்கவில்லை.
இதைத்தொடா்ந்து, சிபிஎம் மாவட்டச் செயலா் டி. முருகையன் தலைமையிலும், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் முன்னிலையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இதில், கிராம பிரமுகா்கள் பி. இளங்கோவன், கருணாநிதி, பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, பொதுமக்கள் இணைந்து மறியலில் ஈடுபடுவதால், சிபிஎம் கட்சிக்கொடியை பயன்படுத்தக் கூடாது என ஒரு தரப்பினா் தெரிவித்தனா். இதனால், மறியலில் பங்கேற்ற சிபிஎம் கட்சியினா் கட்சி கொடியை பயன்படுத்தவில்லை.
இம்மறியலில் ஈடுபட்ட பெண்கள் 90 போ் உள்பட 146 பேரை போலீஸாா் கைது செய்து, மன்னாா்குடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், மாலையில் விடுவித்தனா். இம்மறியலால் அப்பகுதியில் சுமாா் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.