நாமக்கல்: 23 மணிநேரம் நடந்த விஜிலன்ஸ் ரெய்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் எட்டு பேர் கொண்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. அலுவலகத்தில் இருந்த சுமார் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எல்காட் போட்டோ கிராபராக பணியாற்றும் பசீர் அகமது என்பவரிடமிருந்து 71,150 ரூபாய், அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் 61,900 ரூபாய் மற்றும் அலுவலகத்தில் சிதறி கிடந்த ரொக்கம் என கணக்கில் வராத 1,42,500 ரூபாய் சிக்கியது.
எல்காட்டில் போட்டோகிராபராக பணியாற்றிய பசீர் அகமது இடமிருந்து நேரடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அலுவலகத்தின் மற்ற அறைகளில் ஆங்காங்கே இருந்த சிறு சிறு தொகைகள் கிடைத்ததாகவும், இது தவிர அலுவலகத்தில் இருந்த புரோக்கர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் இருந்து சோதனை செய்தபோது கிடைத்த பணத்தை வைத்திருந்த பசீர் அகமது உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.