திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு - காவலருக்கு 3 ஆண்டு சிறை!
திருப்பூர் பி.கே.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). கடந்த 2006-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த வாகனத்தை பொன்னுச்சாமியிடம் ஒப்படைப்பதற்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவில் அப்போது பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி, ஏட்டு கோவிந்தராஜ் (56) ஆகியோர் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பொன்னுச்சாமி திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழங்கிய அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பொன்னுச்சாமியிடம் போலீஸார் கொடுத்து அனுப்பியுள்ளனர். கடந்த 4-9-2006 அன்று பொன்னுச்சாமி, ஏட்டு கோவிந்தராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் பழனிசாமியிடம் அந்தப் பணத்தைக் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், திருடு போன இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொடுக்க பொன்னுச்சாமியிடம் லஞ்சம் பெற்ற ஏட்டு கோவிந்தராஜூக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். உதவி ஆய்வாளர் பழனிசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்ட கோவிந்தராஜ் தற்போது திருப்பூர் மாநகர போலீஸில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.