Adani: `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!' - என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தின் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சாட்டப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகுல் ரோஹத்கி, "நான் ஒரு வழக்கறிஞர். அதனால், அதானி குழுமம் சார்ந்த பல வழக்குகளில் ஆஜாராகி உள்ளேன். ஆனால், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வையே. நான் அதானி குழுமம் சார்ப்பாக இவற்றை பேசவில்லை.
முதல் மற்றும் ஐந்தாம் குற்றச்சாட்டு...
நான் அமெரிக்கா நீதிமன்றம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை முழுவதும் ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் ஐந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். அதில் முதல் குற்றச்சாட்டும், ஐந்தாவது குற்றச்சாட்டும் தான் மிக முக்கியமானது. இந்த இரண்டிலுமே கௌதம் அதானி மீதோ, சாகர் அதானி மீதோ எந்த குற்றசாட்டும் சொல்லப்படவில்லை.
கௌதம் அதானி மற்றும் சாகர் அதானியை தவிர்த்து முதல் குற்றசாட்டில் சில அதிகாரிகள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த முதல் குற்றசாட்டு வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டத்தை மீறுவதற்கான சதி நடந்தது என்பது ஆகும். இதில் இரண்டு அதானிகளின் பெயருமே இல்லை.
புரியவில்லை...
ஐந்தாவது குற்றசாட்டு நீதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். இதிலும் அதானிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர் இடம்பெறவில்லை. அதானி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ, அப்படி இந்தக் குற்றசாட்டுகளுக்கு பதிலளிபார்கள். மேலும், அவர்கள் பங்குச்சந்தைக்கும் பதிலளிப்பார்கள். இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வை ஆகும்.
ஒரு குற்றப்பத்திரிகையில் இவர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் யார் லஞ்சம் வழங்கினார், யார் வாங்கியிருக்கிறார், என்ன துறையில் நடந்தது, எப்படி நடந்தது, அவற்றை பற்றிய தகவல்கள் என எதுவும் இடம்பெற வில்லை. இந்த குற்றப்பத்திரிக்கை வெறுமனே இருக்கிறது. இந்த மாதிரியான குற்றப்பத்திரிகைக்கு ஒருவர் எப்படி பதிலளிக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால், அதானி குழுமம் இந்த வழக்கை சந்திக்க அமெரிக்க வழக்கறிஞர்களிடம் இருந்து அறிவுரையை பெறுவார்கள்" என்று அதானி குழுமம் மீதான அமெரிக்கா நீதிமன்ற குற்றசாட்டை பற்றி கூறியிருக்கிறார்.
யார் இந்த முகுல் ரோஹத்கி?
முகுல் ரோஹத்கி மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆவார். 1994-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக பொறுப்பேற்றார். அதன் பிறகு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை அட்டர்னி ஜெனராலாக பணிபுரிந்தார். தற்போது, வழக்கறிஞராக தன் பணியை தொடர்கிறார்.
அதானி மீதான குற்றசாட்டு என்ன?
`சோலார் ஒப்பந்தம் சம்பந்தமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பொய் கூறி முதலீட்டை பெற்றுள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றசாட்டை அமெரிக்க நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது அடிப்படையற்ற குற்றசாட்டு என்று அதானி குழுமம் இந்தக் குற்றசாட்டு எழும்பிய நேரத்தில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...