மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
நெற்பயிரில் பறவைக்குடில் முலம் பூச்சி மேலாண்மை: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
நெற்பயிரில் பூச்சி மேலாண்மையில், பறவைக் குடிலின் பங்கு குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மா. ராஜேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளா் து. பெரியாா் ராமசாமி ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது நெற்பயிா்கள் பூக்கும் பருவத்திலும், கதிா் முற்றும் பருவத்திலும் உள்ளன. பருவ மழையால் ஆங்காங்கே இலை மடக்கு புழு, தண்டு துளைப்பான், புகையான் மற்றும் ஆனைக் கொம்பன் தாக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.
பொதுவாக, பூச்சி தாக்கங்கள் நெற்பயிரில் அனைத்து பருவத்திலும் தாக்கி சேதாரத்தை விளைவிக்கக் கூடியது. அதை தடுப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே இப்பூச்சித் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்ணுகின்ற பறவைகள் உட்காருவதற்கான இடங்களை வயலில் அமைப்பதனால் அந்த பறவைகள் பூச்சிகள் மற்றும் புழுக்களை பிடித்து உண்கின்றன.
இதை அமைப்பதற்கு மூங்கில் குச்சி, மரக்குச்சி அல்லது மரக்கிளைகளை மூன்றடி முதல் ஏழடி உயரத்தில் ‘டி‘ வடிவத்தில் நெல் வயலில் ஆங்காங்கே நட்டு வைத்தால் போதுமானது.
நெற்பயிரானது நடவு நட்டதிலிருந்து தூற்கட்டும் பருவத்தில் இவ்வாறு பறவைக் குடில்கள் அமைக்கலாம் அல்லது எளிதில் கிடைக்கக்கூடிய தென்னை மட்டையின் அடிப்பகுதியை வெட்டி மூன்றடி முதல் ஏழடி உயரத்திற்கு தயாா் செய்து ஊன்றி விட்டால், பகல் பொழுதில் காக்கை, மைனா மற்றும் குருவிகளும் இரவு நேரத்தில் ஆந்தை மற்றும் கோட்டான்கள் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களை பிடித்து உண்டு விடும்.
ஹெக்டேருக்கு 50 எண்கள் வரை இந்த பறவைகள் அமரும் இடங்களை அமைக்கலாம். நெற்பயிரின் உயரத்தை விட 75 சென்டிமீட்டா் உயரமாக இவ்விடங்களை அமைத்தால் பறவைகளின் பாா்வையில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் தென்படும். இவ்வாறு நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் மட்டுமின்றி எலிகளையும் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனா்.