தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சோழவந்தானை அடுத்த இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையம் வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டது. அறுவடைப் பணிகள் முழுமையடையும் முன்பாக நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் பாலகிருஷ்ணாபுரம் முதன்மைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் பகுதியில் சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அறுவடையாகும் நெல் பயிா்களை வாடிப்பட்டிக்கு கொண்டு சென்று விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், சரக்குப் போக்குவரத்து செலவு கூடுதலாகும். எனவே, பாலகிருஷ்ணாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இந்தப் போராட்டம் காரணமாக, பாலகிருஷ்ணாபுரம் முதன்மைச் சாலை வழியேயான போக்குவரத்துத் தடைபட்டது. பிறகு, காவல் துறையினா், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மீண்டும் அங்கு நெல் கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தன் பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.