மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்
`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?" எனக் கேட்டிருந்தார்.

அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அபிஷன் சொன்னதுபோலவே, நேற்று அவர் (அக்டோபர் 31) காதலி அகிலாவை கரம்பிடித்தார்.
இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அபிஷன் ஜீவிந்த்- அகிலா இருவரும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
"நேற்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்கிருந்தோ வந்த ஒரு பையனை வளர்த்துவிட்டது நீங்கள் எல்லோரும் தான்.
உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. என்னிடம் அன்பாக நடந்துகொண்டிருக்கிறீர்கள்.
நான் எதை செய்தாலும் நீங்கள் (மீடியா) மக்களிடம் கொண்டி சேர்த்திருக்கிறீர்கள்.

எல்லோருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். படம் எடுத்தப்பிறகுதான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
எப்போது அகிலாவை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்று தோணுகிறதோ? அப்போது தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த இடத்தில் என் வாழ்க்கை மாறும் என்று நம்பியதால் தான் மேடையில் வைத்து என்னை "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?" என்று கேட்டேன்.
6-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே அவர்களை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் பள்ளி நண்பர்கள் தான். படம் எடுப்பதை விட மாட்டேன். இடையில் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எனக்கு ஏற்ற படங்களாக இருந்தால் நடிப்பேன்.

நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதிலிருந்து சில நல்ல கதைகளைக் கேட்டு வைத்திருக்கிறேன். ஆனால் அடுத்து ஒரு படம் இயக்கவிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


















