பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது!
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாநிலத்தின் பர்த்தானா சந்திப்பில் காவல் துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தப்போது ஓட்டுநரின் இருக்கைக்கு கீழ் 6 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தில் வந்த குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அனஸ் அஜாஸ் அவான் மற்றும் சஹித் அஹமது ஷேக் ஆகிய 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து மேலும் 2 கிலோ அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க:சாலை விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டம் பிரிவு 8/21 மற்றும் 29 கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த போதைப் பொருள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.