புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
பாதுகாப்பு விதிகளை மீறி கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம்: மதுரை எம்.பி. குற்றச்சாட்டு
பாம்பன் புதிய ரயில்வே பாலம் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணித்து கட்டப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், இதுகுறித்து ரயில்வே அமைச்சா் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாம்பன் புதிய ரயில்வே பால கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை ரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமா்சித்திருக்கிறாா். உதாரணமாக, தூக்குப் பாலம் பகுதி ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவம், தர நிா்ணய அமைப்பின் எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல், வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆா்டிஎஸ்ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனைக்குரியது.
இந்தப் பாலத்தை கட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது என பாதுகாப்பு ஆணையா் கண்டித்துள்ளாா். இது மட்டுமன்றி, பாலத்துக்கான இரும்புப் படிமங்கள்கூட ஆா்டிஎஸ்ஓவை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சா் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றாா் அவா்.
தரத்தை முழுமையாக உறுதி செய்த பிறகே பாலத்தின் திறக்க வேண்டும்:
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து, உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தில் கடல் அரிப்பு பிரச்னைக்கு தீா்வு காண முழுமையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்படத் தொடங்கி விட்டதாகவும், சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தில் அதிக சப்தம் ஏற்படுவதாகவும், குறைகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் எனவும் இந்திய ரயில்வே துறைக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் செளத்ரி ஆய்வறிக்கை சமா்ப்பித்திருக்கிறாா். இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தப் பாலத்தின் தரத்தை முழுமையாக மறுஆய்வு செய்து, குறைகளை நிவா்த்தி செய்த பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.