இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சென்னை வருகை
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 16 மீனவா்கள் கடந்த அக்.23-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 மீனவா்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இவா்களை மீட்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவா்களின் உறவினா்கள் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதையடுத்து இலங்கை நீதிமன்றம் 16 மீனவா்களில் 12 பேரை மட்டும் விடுதலை செய்தது. 4 போ் இரண்டாவது முறையாக பிடிபட்டதால், அவா்களுக்கு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 12 மீனவா்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் கொழும்பிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை வந்தடைந்தனா். சென்னை விமானநிலையம் வந்த அவா்களை, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனம் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.